கரையோர மக்களுக்கு எச்சரிக்கை: செம்பரம்பாக்கம் ஏரியில் 200 கன அடி உபரிநீர் திறப்பு!


வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி

சென்னை மாநகராட்சியின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையில் இருந்து 200 கன அடி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் மற்றும் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு கடந்த சில நாட்களாக நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் அதிகபட்ச நீர்மட்டம் 24 அடி என்ற நிலையில் தற்போது நீர்மட்டம் 22.29 அடியாகவும் மொத்த கொள்ளளவு 1395 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

ஏரியில் இருந்து 200 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது அணைக்கு 425 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காகவும், உபரிநீராகவும் 163 கன அடி நீர் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது 23 அடியை ஏரியின் நீர்மட்டம் நெருங்கி வருவதால் காலை 10 மணி அளவில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் கூடுதலாக 175 கன அடி திறக்க முடிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே 25 கன அடி நீர் உபரிநீராக திறக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 200 அடியாக இதனை உயர்த்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சீறிப்பாயும் தண்ணீர்

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரநீர் திறக்கப்படுவதை அடுத்து, குன்றத்தூர், பம்மல், சிறுகளத்தூர் பகுதிகளில் அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரி தற்போது முழுமையாக நிரம்பி இருப்பதால் இவ்வாண்டு குடிநீர் பிரச்சினை ஏற்படாது என சென்னை மக்கள் சற்றே ஆசுவாசமடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


HBD YamiGautam | சர்ச்சைகளை சாதனைகளாக்கிய பஞ்சாபி பொண்ணு!

கனமழை... புயல்... 1.5 லட்சம் வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு!

x