ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்: 5 ரூபாயில் மெட்ரோவில் பயணிக்கலாம்!


மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தளநாளை முன்னிட்டு டிசம்பர் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் ரூ.5 கட்டணத்தில் பொதுமக்கள் பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.

கடந்த 2009 டிசம்பர் 3-ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதனை நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ம் தேதி அடித்தள நாள் விழாவாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்வாண்டு அடித்தள நாள் விழா வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வெறும் 5 ரூபாய் கட்டணத்தில் ஒரு வழிப்பாதை பயணத்தை பயணிகள் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்

பேடிஎம், வாட்ஸ் ஆப், ஃபோன் பே, ஸ்டடிக் கியூ ஆர் போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் பதிவு செய்யும் டிக்கெட்டுகளுக்கு மட்டும் இந்த வசதி பொருந்தும். இதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதும், பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்துவதும் நோக்கம் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சலுகை டிசம்பர் 3-ம் தேதி மட்டுமே வழங்கப்படும் எனவும், ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்

சிங்கார சென்னை அட்டை, மெட்ரோ பயண அட்டை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி ஆகியவற்றிற்கு இந்த சலுகை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடித்தள நாள் விழாவை முன்னிட்டு பயணிகள் அனைவரும் பங்கேற்று விழாவை சிறப்பிக்க வேண்டுமென சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

x