அதிர்ச்சி ஆய்வு... கர்ப்பிணிகளின் உடல்நலத்துக்கு உலைவைக்கும் இந்தியாவின் வெப்பநிலை உயர்வு


கர்ப்பிணி

காலநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் அதிகரிக்கும் வெப்பநிலை உயர்வு, கர்ப்பிணிகளின் உடல்நலத்தை வெகுவாய் பாதிக்கும் என ஆய்வு ஒன்றின் முடிவு தெரிவிக்கிறது.

மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் நிதியளிப்பு உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, இந்த அதிர்ச்சிகரமான முடிவுகளை அறிவித்துள்ளது. இந்த ஆய்வறிக்கையின் வெளியீட்டு விழாவில் பேசிய துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி, இந்தியாவை பாதிக்கும் காலநிலை மாற்றத்திலான வெப்பநிலை உயர்வு குறித்து தனது கவலைகளை பகிர்ந்து கொண்டார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

காலநிலை மாற்றத்தின் காரணமாக இந்தியாவில் வெப்பநிலை அதிகரிப்பு, கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவம், கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம் மற்றும் ப்ரி-எக்லாம்ப்சியா உள்ளிட்ட கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும் என்று, அரசு ஆதரவிலான இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்தியாவில் வேளாண் சுற்றுச்சூழல் மண்டலங்களின் கண்ணோட்டத்தில் இது முதல் இந்திய ஆய்வு. இதற்கு முன்னர் இது போன்ற ஆய்வு இந்தியாவில் செய்யப்படவில்லை” என்று அறிக்கை வெளியீட்டு விழாவில் ஸ்மிருதி இரானி பேசினா.

நீடித்த வெப்ப வெளிப்பாட்டின் பாதகமான விளைவுகளுக்கு கர்ப்பிணிப் பெண்கள் அதிக பாதிப்புக்கு ஆளாவார்கள். 2030-ம் ஆண்டளவில் இந்தியாவில் ஆண்டு வெப்பநிலை 1.7 முதல் 2.2 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீவிர வெப்ப பாதிப்புகளுக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, அசோசெம் ஆகியவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன. இந்தப் புதிய ஆய்வு, பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் அதிக அபாயங்கள், குறிப்பாக சுகாதார விளைவுகள் மற்றும் சமூகப் பொருளாதார பாதிப்புகள் குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. உடல்நல அபாயங்கள் முதல் வாழ்வாதாரம் வரையிலான பல்வேறு காரணிகளை பகுப்பாய்வு செய்து, இந்த விளைவுகளைத் தணிப்பதற்கான அவசரத் தேவையையும் இந்த ஆய்வறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்தியாவில் அதிகரிக்கும் வெப்பநிலை

வெறுமனே சூழல் மற்றும் மருத்துவம் சார்ந்த ஆய்வாக அல்லாது, சமூக அளவில் அரசு மேற்கொண்டாக வேண்டிய நடவடிக்கைகளையும் ஆய்வு வலியுறுத்துகிறது. வெப்பம் தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்க சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் காலநிலை உணர்திறன் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல். அவசர தங்குமிடங்கள் மற்றும் ஹாட்லைன்களை நிறுவுதல் ஆகியவற்றின் அவசியத்தையும் இந்த ஆய்வு வலியுறுத்தி உள்ளது.

x