2 மாதத்தில் 30 பேர் உடல் உறுப்பு தானம்... தமிழ்நாடு உலக சாதனை படைத்திருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!


அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்த பின்னர், உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உடல் உறுப்புதானம் செய்தவர் உடலுக்கு மரியாதை

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 33 வயதான இளைஞர் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவர் தனது உடல் உறுப்புகளை தானம் செய்திருந்த நிலையில், அவரது உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மரியாதை செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ‘’33 வயதான இளைஞர் நேற்று இரவு மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது பெற்றோர்களிடம் உடல் உறுப்புதானம் குறித்து எடுத்துக்கூறிய நிலையில் அவர்கள் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானமாக அளித்துள்ளார்கள்.

நூற்றாண்டைக் கடந்த ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதல் நிகழ்வாக இன்று உடல் உறுப்புதானம் நிகழ்வு முதல் முறையாக நடந்துள்ளது. தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புதானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு சார்பாக மரியாதை செய்யப்படும் என அறிவித்திருந்த நிலையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் மூளைச்சாவு அடைந்த 30 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது.

இது இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் நிகழ்த்தப்பட்ட சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த 30 பேரின் உடல் உறுப்பு தானமும் பலரின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்துள்ளது. அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என அறிவித்த பிறகு 3315 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்துள்ளனர். உடல் உறுப்பு வேண்டி 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்’’ என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

x