இப்படியும் காசு பார்க்கலாமா? - 1,122 சடலங்களை ரூ.3.66 கோடிக்கு விற்ற கேரள அரசு!


கோப்புப்படம்

உரிமை கோரப்படாத 1,122 சடலங்களை தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு விற்பனை செய்து ரூ.3.66 கோடியை கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளது.

விபத்து, குற்ற சம்பவங்கள், இயற்கை மரணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சடலங்கள், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அப்போது பிரேத பரிசோதனை முடிந்த பிறகு, சம்பந்தப்பட்ட உறவினர்கள், சடலங்களை வாங்கிச் செல்கின்றனர். சில நேரங்களில் யாரும் உரிமை கோரப்படாத நிலையில், அந்த சடலங்கள் பல ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் உள்ள பிணவறைகளில் வைக்கப்படுகின்றன. நாளுக்குநாள் வரும் சடலங்களால், இடப்பற்றாக்குறை பிரச்சினையை மருத்துவமனை நிர்வாகங்கள் சந்தித்து வருகின்றன. இதை சரிசெய்வதற்கான ஒரு மாற்று யோசனையை கேரள அரசு எடுத்துள்ளது.

கோப்புப்படம்

அதாவது, உரிமை கோரப்படாத சடலங்களை, மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு சடலங்களை விற்பனை செய்து வருவாய் ஈட்டுவது என்று கேரள முடிவு எடுத்துள்ளது. அதன்படி, கேரள மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த 2008 ம் ஆண்டு முதல் உரிமைக்கோராமல் 1,122 மனித சடலங்கள் இருந்தன.

அதிகபட்சமாக எர்ணாகுளம் அரசு மருத்துவமனை 16 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்கள் இருந்தன. அதேபோல, திருச்சூர் அரசு மருத்துவமனையில் 157 சடலங்கள், பரியாரம் அரசு மருத்துவ கல்லூரியில் 166 சடலங்கள், கோழிக்கோடு அரசு மருத்துவனையில் 99 சடலங்கள் இருந்தன.

கேரள மாநிலம்

இந்த உரிமைகோரப்படாத 1,122 சடலங்களை தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கேரள அரசு விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு 3.66 கோடி வருவாய் கிடைத்துள்ளது. பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரமும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000ம் ஆண்டு முதல் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அந்த கல்லூரியில் 60 மாணவர்களுக்கு ஒரு சடலம் வைத்து வகுப்பு எடுக்க வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது. அதனால், மனித சடலங்களுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

x