ப்ளீஸ்... நீலகிரிக்கு வராதீங்க... கனமழையால் கலெக்டர் அறிவிப்பு!


நீலகிரியில் கனமழையால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு

மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, சுற்றுலாப் பயணிகள் யாரும் மழை நிற்கும் வரை நீலகிரிக்கு வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அருணா கேட்டுக்கொண்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவுகள், மண் சரிவுகள், பாறைகள் உருண்டுவிழும் சம்பவங்கள், மற்றும் மழை நீர் தேங்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மலைப்பாதையின் பல்வேறு இடங்களிலும் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாகனத்தில் விழுந்து கிடக்கும் மரம்.

இதே போல் மலை ரயில்பாதையில் தண்டவாளத்தில் பாறைகள் மற்றும் மண் சரிந்துள்ளதால், ரயில் போக்குவரத்தும் வருகிற 25-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு மீட்புப்பணிகளை தொடங்க முடியாத அளவிற்கு தொடர்ந்து மழைபெய்து வருவதால் இந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்-குன்னூர், குன்னூர்-உதகை இடையேயான மலைப்பாதைகளிலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, மரங்கள் சாலையில் விழுந்துள்ள நிலையில் அவற்றை அகற்றும் பணியில் வருவாய்த்துறையினர், தீயணைப்புத்துறையினர், பேரிடர் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆட்சியர் அருணா

இதனிடையே மழை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மேலும் பேரிடர்கள் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. எனவே, சுற்றுலாப் பயணிகள், மழை நிற்கும் வரை நீலகிரிக்கு வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அருணா கேட்டுக்கொண்டுள்ளார்.

மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பும் தருவாயில் இருப்பதால், விரைவில் ஆறுகளிலும் தற்போதுள்ள வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு, நீலகிரிக்குப் பயணிப்போர் அத்தியாவசிய தேவைகளைத் தவிர பிற காரியங்களுக்காக வருவதை தவிர்க்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

மர்ம காய்ச்சலால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்... உலக சுகாதார அமைப்பு அலர்ட்!

படப்பிடிப்பில் பயங்கர விபத்து... நூலிழையில் உயிர் தப்பினார் சூர்யா!

x