குட் நியூஸ்... வந்தே பாரத் ரயிலில் மாணவர்களுக்கு இலவச பயணம்! இரயில்வே அமைச்சர் அறிவிப்பு!


வந்தே பாரத் ரயில்

ஒடிசாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்று கருதப்படும் பூரி முதல் ஹௌரா வரையிலான அதிவேக ரயிலில் மாணவர்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்.

வந்தே பாரத் துவக்க விழாவில் மோடி

இந்தியாவின் தற்போதைய அதிவேக ரயில் என்றால் அது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தான். அதிகபட்சம் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மூலம் பயண நேரம் குறைவதுடன், சொகுசாகவும் பயணிக்கலாம். கிட்டதட்ட விமானத்தில் பயணிப்பது போன்ற, சிறிதும் அதிர்வில்லாத அனுபவம் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதில் தமிழகத்திற்கு மட்டும் 2 ரயில் சேவைகள் கிடைத்துள்ளன.

வந்தே பாரத் ரயில் இருக்கைகள்

அடுத்தகட்டமாக சென்னை - விஜயவாடா, திருநெல்வேலி - சென்னை என புதிதாக 2 ரயில்கள் வரவுள்ளன. இது தவிர வந்தே மெட்ரோ என்ற பெயரில் சென்னை - திருப்பதி இடையில் அதிவேக ரயில் சேவையை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒடிசாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெருமையை பெற்றது பூரி - ஹௌரா ரயில் சேவை. இதனை கடந்த மே 18ம் தேதி பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இந்த ரயிலில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பயண அனுபவத்தை அளிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. முன்னதாக ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்ற பூமி பூஜையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். பின்னர் மாணவ, மாணவிகளுடன் உரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தொடர்பான வீடியோக்களைப் பார்க்கும் போது, அதில் பயணிக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் விரும்புகின்றனர். இந்த ஏக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் போட்டி ஒன்று நடத்தப்படும். அதன் மூலம் 50 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் இலவசமாக அழைத்து செல்லப்படுவர் எனக் கூறினார்.

இந்த அறிவிப்பு மாணவ, மாணவிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தற்போதைக்கு சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே எனக் கூறப்பட்டுள்ளது.

x