நீலகிரி மலை ரயில் அடுத்த 3 நாட்களுக்கு இயங்காது: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!


நீலகிரி மலை ரயில் தண்டவாளத்தில் மீண்டும் நிலச்சரிவு

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மழை ரயில் பாதையில் மரங்கள் மற்றும் பாறைகள் விழுந்துள்ளதால் வருகிற 25-ம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக அடுத்தடுத்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 9-ம் தேதி நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில், பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டது.

இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூர்-உதகை இடையேயான மலை ரயில்பாதை தண்டவாளத்தில் பல்வேறு இடங்களில் பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் ரயில்வே பாதைக்கு கீழ் உள்ள நிலப்பரப்பு முழுவதும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் புனரமைப்பு பணிகள் தாமதமாகி வந்தது.

மரங்கள், பாறைகள் உருண்டுள்ளதால் மலை ரயில் சேவை ரத்து

சுமார் ஒரு வார காலத்திற்கும் மேலாக ரயில்வே பணியாளர்கள் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு கடந்த 18-ம் தேதி வரை தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த 19-ம் தேதி மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.

இதனிடைய நேற்று இரவு பெய்த தொடர் கனமழை காரணமாக மீண்டும் தண்டவாளத்தின் பல்வேறு இடங்களிலும் மரங்கள் மற்றும் பாறைகள் உருண்டு விழுந்துள்ளது.

தண்டவாளத்தில் விழுந்துள்ள கற்கள், மண்ணை அகற்றும் வரை ரயில் சேவை ரத்து

இதனால் வருகிற 25-ம் தேதி வரை மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இருப்பினும் குன்னூர்-உதகை இடையேயான மலை ரயில்சேவை தொடர்ந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மற்றும் மதியம் 2 மணிக்கு கிளம்ப வேண்டிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு கட்டணம் திரும்ப வழங்கப்பட்டது. இருப்பினும் மலை ரயிலில் பயணிக்க முடியாததால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலைரயில் பாதையில் கிடக்கும் பாறைகள்.

இதையும் வாசிக்கலாமே...

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் மீண்டும் ரெய்டு!

x