விபத்தில் சிக்கியும் இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்: சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்!


ஆம்புலன்ஸ், மருத்துவர் ஜாதவ் குழுவினர்

கடுமையான சூழலிலும் நோயாளியின் உயிரைக் காப்பாற்ற சென்னைக்கு ஓடி வந்த புனே மருத்துவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றுபவர் டாக்டர் சஜ்சீவ் ஜாதவ். இவர் சென்னையில் சிகிச்சை பெற்று வரும் கேரளாவைச் சேர்ந்த இளைஞருக்கு, கடந்த 20-ம் தேதி நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருந்தார். இதற்காக, அவர் நேற்று முன்தினம் புனே சென்று, அங்குள்ள டி.ஒய்.பாட்டீல் மருத்துவமனைக்கு சென்று, மூளைச்சாவு அடைந்த 19 வயது இளைஞரின் நுரையீரலை மீட்டெடுத்தார்.

பின்னர் அங்கிருந்து விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில், மருத்துவரும் அவரது குழுவினர் சென்ற ஆம்புலன்ஸ் ஒரு வேன் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த அந்த ஆம்புலன்ஸ் பின்னர் ஒரு அரசு பேருந்து மீது மோதி, அருகே இருந்த ஹாரிஸ் பாலத்தின் சுவரில் மோதி நின்றது.

இந்த விபத்தில் வாகனம் சேதமடைந்தது மட்டுமல்லாமல், மருத்துவர் ஜாதவ் மற்றும் சக மருத்துவர் ஒருவரும் காயமடைந்தனர். டி.ஒய். பாட்டீல் மருத்துவமனையிலிருந்து ஒரு உதவிக்காக பிக் அப் கார் ஒன்று ஆம்புலன்ஸைப் பின்தொடர்ந்து வந்தது.

மருத்துவர் ஜாதவ்

விபத்து ஏற்பட்ட நிலையிலும், ஒரு உயிரைக் காக்க வேண்டும் என்று முடிவு செய்த மருத்துவர் ஜாதவ், தனது குழு மற்றும் நுரையீரலுடன் காரில் சென்று விமான நிலையத்தை அடைந்தார். அங்கிருந்து தனி விமானத்தில் சென்னைக்கு குழு புறப்பட்டது.

சென்னையில் தரையிறங்கிய அந்த குழு நேராக தனியார் மருத்துவமனைக்குச் சென்று கேரளாவைச் சேர்ந்த நோயாளிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்ததது. இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததில், 72 நாட்கள் வெண்டிலேட்டரில் இருந்த நோயாளி தற்போது நலமாக உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை, அந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்காவிட்டால், அந்த இளைஞரின் உயிர் பிரிந்திருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

x