காதலனைக் கரம் பிடிக்க ரூ.2,484 கோடி மதிப்புள்ள சொத்துக்களை உதறிய காதலி! குவியும் வாழ்த்துகள்!


காலமெல்லாம் காதல் வாழ்க என்று உலகின் ஏதோவொரு மூலையில் ஒரு காதல் ஜோடி இன்னமும் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பணம், சாதி, மதம்,மொழி, இனம், நாடு என்று எதையும் பார்க்காத உன்னதம் காதல். அதனால் தான் பதின்வயதில் எல்லை தாண்டி பாகிஸ்தானுக்கு செல்லவும் துணிய வைக்கிறது காதல்.

அப்படி மலேசியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், குடும்பத்தார் அங்கீகரிக்காத தனது காதலனைத் திருமணம் செய்து கொள்வதற்காக கோடிக்கணக்கான தனது சொத்துக்களை விட்டுச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

ஏஞ்சலின் ஃபிரான்சிஸ் என்ற மலேசியப் பெண் தனது நீண்டகால காதலரான ஜெடிடியா பிரான்சிஸை திருமணம் செய்வதற்காக 300 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 2,484 கோடி) மதிப்புள்ள தனது பரம்பரை சொத்துக்களை வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

ஏஞ்சலினா மலேசிய தொழில் அதிபர் கூ கே பெங் மற்றும் முன்னாள் மிஸ் மலேசியா பாலின் சாய் ஆகியோரின் மகள்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஏஞ்சலின் பயின்ற போது தன்னுடன் படித்த சக மாணவரான ஜெடிடியாவை காதலித்ததாக கூறப்படுகிறது. ஏஞ்சலின் தனது காதலை குறித்து பெற்றோரிடம் தெரிவித்த போது அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பணம், சொத்து, அந்தஸ்து போன்ற காரணங்களைக் கூறி ஏஞ்சலின் காதலை அவரின் தந்தை ஏற்கவில்லை. இதன் விளைவாக, அவர் தனது குடும்பத்தை விட்டு வெளியேறி தனது காதலரை திருமணம் செய்து புதியவாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்தார். ஏஞ்சலினும் ஜெடிடியாவும் 2008-ல் திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

ஆனால் ஏஞ்சலின் தனது பெற்றோரின் விவாகரத்தின் போது நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார். அப்போது அவர் மீண்டும் தனது தந்தையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தந்தை பணம் சம்பாதிப்பதில் மும்முரமாக இருந்த போது, குடும்பத்தை பார்த்துக் கொண்ட தனது தாய்க்கு ஆதரவாக ஏஞ்சலின் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் அவர்கள் மீண்டும் ஒன்றாக வருவார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் ஏஞ்சலினின் கதையும் காதலைப் பற்றிய அவரது நேர்மறையான கருத்தும் உலகம் முழுவதும் உள்ள மக்களைக் கவர்ந்துள்ளது. அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

x