சிவாலயங்களில் சிவராத்திரி கொண்டாட்டம்: இன்று முதல் 1,360 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!


அரசு பேருந்துகள்

சிவராத்திரி மற்றும் வார விடுமுறை தினங்களை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக இன்றுமுதல் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1,360 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மகா சிவராத்திரி நாளைக் கொண்டாடப்படுகிறது. சிவராத்திரியில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் வாழ்வில் உயரவும், அனைத்து நலன்களையும் பெற முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் புகழ்பெற்ற சிவாலயங்களில் சிவபெருமானை வழிபட அன்றைய தினம் பக்தர்கள் செல்வார்கள்.

நாளை (வெள்ளிக்கிழமை) சிவராத்திரி, அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு என வார விடுமுறை தினங்கள் வருவதால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து சிவாலயங்களுக்கும் தங்கள் சொந்த ஊர்களுக்கும் மக்கள் படையெடுப்பார்கள்.

அதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து வெளியூர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக 1,360 சிறப்பு பேருந்துகளையும் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 270 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை 390 பேருந்துகளும், சனிக்கிழமை 430 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும்.

கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 70 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 1,360 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்குத் திரும்பி வர வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்துகளில் பயணிப்பதற்கு பயணிகள், போக்குவரத்துக் கழக இணையதளம் மற்றும் செயலி மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x