இந்தியாவில் அதிகரிக்கும் இளம்வயது மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமா? புதிய ஆய்வறிக்கை அலசிய காரணிகள்


இதயம் - கொரோனா வைரஸ்

கொரோனா காலத்துக்குப் பின்னர் இந்தியாவில் இளம்வயது மரணங்கள் திடீரென அதிகரிப்பதன் பின்னணியில் கொரோனா தடுப்பூசிகள் இருக்கிறதா என்பதை ஆராய ஐசிஎம்ஆர் மேற்கொண்ட ஆய்வறிக்கை புதிய விளக்கத்தை அளித்துள்ளது.

மழை விட்டும் தூவானம் விடாத கதையாக, கொரோனா விடைபெற்ற பின்னரும் அதனையொட்டிய மரணங்கள் தொடர்வதாக இந்தியாவில் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. திடீரென இளம்வயது இந்தியர்கள் இறப்பது சக குடிமக்களை பாதித்துள்ளது. அடிப்படையில் வேறெந்த உடல்நலப் பாதிப்பும் இல்லாத அவர்கள், திடீரென அகாலமாய் மரணமடைந்தார்கள். மாரடைப்பு உள்ளிட்ட காரணங்கள் இதன் பின்னணியில் சொல்லப்பட்டாலும், இளம்வயதினர் மத்தியில் அவை ஏற்றுக்கொள்ள முடியாதிருந்தது.

மாரடைப்பு மரணங்கள் - கொரோனா தடுப்பூசி

இதனிடையே இளம்வயதினரிடையே நிகழும் திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமா என்றறிய ‘இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான’ ஐசிஎம்ஆர் ஒரு ஆய்வினை மேற்கொண்டது. அக்டோபர் 1, 2021 - மார்ச் 31, 2023 க்கு இடையில் விவரிக்கப்படாத காரணங்களால் திடீரென இறந்த 18-45 வயதுடைய ஆரோக்கியமான நபர்களில், அடிப்படை உடல்நலப் பிரச்சினைகள் இல்லாதவர்கள் இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டனர்.

இவ்வாறாக மேற்கொள்ளப்பட்ட ஐசிஎம்ஆர் ஆய்வின் முடிவுகள், இளம் வயதினரின் திடீர் இறப்புக்கு கொரோனா தடுப்பூசிகள் காரணமல்ல என்கிறது. கடுமையான கொரோனா பாதிப்பின் பிந்தைய பக்கவிளைவுகள், அதிகப்படியான குடி, இதர மருந்துகள் அல்லது மருத்துவப் பயன்பாடுகள் ஆகியவையே திடீர் மரணங்களின் பின்னணியில் அறியப்பட்டன. நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் முடிக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. அவை அதிகாரபூர்வமாக வெளியாகும்போது, அதன் தரவுகள் இளம்வயது இந்தியர் சாவுகளின் பின்னணியை முழுவதுமாக விளக்கும்.

ஐசிஎம்ஆர்

இப்போதைக்கு, ’இளம்வயது இந்தியர் மரணங்களின் பின்னணியில் கொரோனா தடுப்பூசி இல்லை’ என ஐசிஎம்ஆர் ஆய்வு உறுதிபட தெரிவிக்கிறது. முன்னதாக, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்த ஐசிஎம்ஆர் ஆய்வை மேற்கோள் காட்டி, மாரடைப்பு அபாயங்களைத் தவிர்க்க, கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் ஓரிரு வருடங்களுக்கு அதீத உடல் உழைப்பு மற்றும் பயிற்சிகளைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x