லெஸ்பியன் ஜோடிக்கு பிறந்த குழந்தை... ஈருடலில் ஓருயிரை வாரிசாகப் பெற்றெடுத்த அதிசயம்


மகனுடன் எஸ்டெபானியா - அசஹாரா ஜோடி

ஸ்பெயின் தேசத்தை சேர்ந்த லெஸ்பியன் ஜோடி ஒன்று, தங்களுக்கான வாரிசை, தங்கள் இருவர் உடலிலும் சுமந்து பெற்றுள்ளனர். திருமண பந்தத்தில் இணையும் தன் பாலீர்ப்பாளர்கள் மத்தியில் இது வரலாற்று மற்றும் அறிவியல் சாதனையாக அறியப்படுகிறது.

தன் பாலீர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்ளவும், நவீன மருத்துவத்தின் உதவியோடு குழந்தைகளை பெற்றுக்கொள்ளவும் ஐரோப்பிய சட்டங்கள் அனுமதிக்கின்றன. பாலீர்ப்பின் அடிப்படையில் ஒரே பாலின ஜோடிகள் தங்களை பகிரங்கமாக வெளிப்படுத்திக்கொள்ள வாய்ப்பில்லாத உலகின் இதர நாட்டினருக்கு இந்த சம்பவம் வியப்பை அளிக்கக் கூடும்.

மருத்துவர்களுடன் எஸ்டெபானியா - அசஹாரா ஜோடி

ஸ்பெயின் தேசத்தின் லெஸ்பியன் தம்பதிகளான எஸ்டெபானியா(30) - அசஹாரா(27) ஜோடி, தங்களுக்கான வாரிசை தங்கள் இருவருமே ஏதேனும் ஒரு வகையில் சுமந்து பிரசவிக்க விரும்பினர். வழக்கமாக ஓரினச் சேர்க்கை தம்பதியரில், இருவரில் எவரேனும் ஒருவர் மட்டுமே தங்கள் வாரிசை உருவாக்குவதில் நேரடியாக பங்கேற்க முடியும்.

அது கருமுட்டை அல்லது விந்தணுவை தானம் செய்வதன் மூலமாகவோ, செயற்கை கருத்தரிப்பில் உருவான கருவை வயிற்றில் சுமந்து பிரசவிப்பதன் மூலமாகவோ சாத்தியப்படும். ஆனால் ஸ்பெயின் லெஸ்பியன் ஜோடி, தங்கள் வாரிசை இருவரின் உடல்களும் உரிமை கொண்டாட விரும்பினர்.

எஸ்டெபானியா - அசஹாரா ஜோடியின் விருப்பத்தை பூர்த்தி செய்ய, மருத்துவர்கள் ’இன்வோசெல்’(INVOcell) என்ற நவீன செயற்கை கருத்தரிப்பு உத்தியை தேர்ந்தெடுத்தனர். இதன்படி ஒரு பெண்ணின் கருமுட்டை மூலம் உருவாகும் கரு, இன்னொருவர் வயிற்றில் சிசுவாக வளர்ந்தது.

’இன்வோசெல்’ நுட்பத்தைப் பயன்படுத்தி, முதலில் எஸ்டெபானியாவின் உடலுக்குள் முட்டை மற்றும் விந்தணுக்களின் காப்ஸ்யூல் சேர்க்கப்பட்டது. சில தினங்கள் கழித்து காப்ஸ்யூலின் ஆரோக்கியமான கருக்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த கருவில் ஒன்று அசாஹாராவின் கருப்பையில் பின்னர் பொருத்தப்பட்டது.

மகனுடன் எஸ்டெபானியா - அசஹாரா ஜோடி

அக்டோபர் 30 அன்று, எஸ்டெபானியா - அசஹாரா ஜோடி தங்கள் மகனை இந்த உலகுக்கு வரவேற்றனர். செல்ல மகனுக்கு டெரெக் எலோய் எனப் பெயரிட்டுள்ளனர். தாய்மையை பகிர்ந்து கொண்டதில் தங்கள் சேய்க்கு இருவருமே தாயாகி உள்ளனர். இந்த சிகிச்சைக்கு இந்திய மதிப்பில் சுமார் நான்கரை லட்சம் மட்டுமே செலவாகி இருக்கிறது. மருந்து செலவினங்கள் தனி.

லெஸ்பியன் தம்பதியர், கருவைப் பகிர்ந்து கொள்ளவும், கர்ப்பத்தில் ஈடுபடவும் அனுமதித்த வகையில், தங்களது மகப்பேறினை கொண்டாடி வருகின்றனர். இருவரும் தம்பதியாக சேர்ந்து வாழ்வதிலும், வாரிசை சேர்ந்து உருவாக்கியதிலும் தங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்த்துள்ளனர்.

இந்த வகையில் குழந்தை பெற்றவர்களில் ஐரோப்பாவின் முதல் ஓரினச்சேர்க்கை ஜோடியாகவும், உலகில் இரண்டாவது ஓரினத் தம்பதியாகவும் எஸ்டெபானியா - அசஹாரா ஜோடி சாதனை படைத்திருக்கிறது. முதல் சாதனை அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்த ஒரு லெஸ்பியன் ஜோடி, தங்கள் வாரிசை தங்கள் இருவரது உடல்கள் வாயிலாகவும் பெற்றெடுத்தது. 2018-ல் நடந்த இந்த மருத்துவ வரலாற்று சாதனையில் செயற்கை கருத்தரிப்பின் இருவேறு நுட்பங்கள் கலவையாக பயன்படுத்தப்பட்டன.

இதையும் வாசிக்கலாமே...

x