ஆழ்ந்த உறக்கம் வேண்டுமா? இதையெல்லாம் பழக்கமாக்கிப் பாருங்கள்


ஆழ்ந்த உறக்கம்

அன்றாடம் ஆழ்ந்த உறக்கம் வாய்க்கப் பெறுவது பெரும் கொடுப்பினை. இயல்பான இந்த தூக்கத்தை நமது அபத்தமான பழக்கவழக்கங்களால் இடையில் தொலைத்திருப்போம். மீண்டும் சொக்கும் தூக்கத்துக்கு திரும்ப எளிமையான இந்த நடைமுறைகளை முயற்சித்துப் பார்க்கலாம்.

சிறப்பான தூக்கத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பதை நன்கறிவோம். இரவில் ஆழ்ந்து உறங்கி, காலையில் எழுந்ததும் கிடைக்கும் மறுமலர்ச்சிக்கு ஈடு இணை கிடையாது. அன்றைய தினத்தை வரப்பிரசாதமாக்குவதும், சாபக்கேடாக முடக்குவதும் முந்தைய தினத்தின் தூக்கத்தின் கைகளில் இருக்கக் கூடும்.

கண்ணில் வந்து படியாது கண்ணாமூச்சி காட்டும் தூக்கத்தை வழிக்குகொண்டுவர ஒரு சில ஒழுங்குகள் மற்றும் பழக்கங்களை வழக்கத்துக்கு கொண்டு வந்தாலே போதும். சில தினங்கள் முதல் சில வாரங்கள் வரை இந்த கட்டுப்பாடுகளை பழக்கமாக்கினால், வாழ்நாள் உத்திரவாதமாய் தூக்கம் பழகிய நாய்க்குட்டியாய் காலைச்சுற்றிக்கொண்டு கிடக்கும்.

  • தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்லவும்; எழுந்திருக்கவும். வார வேலை நாட்கள் மட்டுமன்றி, வார இறுதி விடுமுறை தினங்களிலும் இதனை பழகவும்.

  • படுக்கையிலும், படுக்கையறையிலும் ரம்மியம் சேர்க்கவும். படுக்கையை படுப்பதற்கு மட்டுமே பயன்படுத்தவும். படுக்கையில் அமர்ந்து அரட்டை அடிப்பது, சாப்பிடுவது உள்ளிட்டவற்றை தவிர்த்து, படுக்கையில் சாய்ந்ததுமே தூக்கத்தின் நினைவு வர வேண்டும் வகையில் பராமரிக்கவும்.

  • ஆழ்ந்த உறக்கம்

    • படுக்கையறையை போதிய இருட்டாகவும், அமைதியாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்ளவும். பிடித்த நிறத்தில் படுக்கை விரிப்பு, தலையணை உறையும் கூட உதவக் கூடும்.

    • டிவி, ஸ்மார்ட்போன் உள்ளிட்ட வெளிச்சத் திரைகள் படுக்கையில் அறவே கூடாது. வெளிச்சத் திரைகள் வெளியிடும் நீல ஒளி தூக்கத்தை வரவழைக்கும் மெலடோனின் உற்பத்தியை பங்கம் செய்யும். எனவே படுக்கையில் வெளிச்சத் திரை சாதனங்களுக்கு நோ சொல்லவும்.

  • மாறாக, தூக்கம் பிடிபடும் வரை ஆழமான புத்தகத்தை வாசிக்கலாம்; மெல்லிசை கேட்கலாம். இரவில் ஒரு குளியல் போடுவதும் உடனடி தூக்கத்தை வரவழைக்கும். அதிலும் வெதுவெதுப்பான குளியல் என்பது உத்தமம்.

    • படுக்கையில் சாயும் வரை அல்லது சாய்ந்த பிறகும் எதையாவது வாயிலிட்டு நொறுக்குவது ஆபத்தானது. உறக்கத்துக்கு குறைந்தது 2 மணி நேரங்கள் முன்பே சாப்பாட்டு கடையை ஏறக்கட்டிவிட வேண்டும். அதிலும் இரவில் இலகுவான உணவே போதும். டீ, காபி மற்றும் மது உள்ளிட்ட தூண்டும் இயல்பைக் கொண்ட பானங்கள் தூக்கத்துக்கு பரம வைரி.

    • காலை உடற்பயிற்சிக்கு இணையாக மாலையிலும் சற்றே உடற்பயிற்சி செய்வது விரைவான மற்றும் ஆழ்ந்த உறக்கத்துக்கு வழி செய்யும். ஆனால் அதுவும் மாலையோடு முடித்து விட வேண்டும். இரவு உணவுண்ட பிறகு சிலபல தப்படிகளுக்கு நடைபோடலாம். ஆனால் இரவு உடற்பயிற்சி என்பது கட்டாயம் தவிர்க்க வேண்டியது. தம்பதியரின் பாலியல் நடவடிக்கைகள் மட்டும் விதிவிலக்கு.

    ஆழ்ந்த உறக்கம்

    • உறங்கச்செல்லும் முன்னர் தியானம், ஆழ்ந்த சுவாசம் போன்றவற்றை பழகலாம். இவை மனதை அரித்துக்கொண்டிருக்கும் அன்றாட சுமைகளில் இருந்து நம்மை விடுவிக்கும். தூக்கத்துக்கு ஏற்ப உடல் மற்றும் மனதை இலகுவாக்கும்.

    • பகலில் தூங்குவோருக்கு, இரவில் தூக்கம் வராவிடில் பகல் தூக்கத்தை தவிர்க்கவோ, குறைக்கவோ முயல வேண்டும். சுருக்கமான தூக்கம், அதையும் மதியத்துக்குள் முடித்துக்கொண்டால் இரவில் சீக்கிரம் தூக்கம் சாத்தியமாகும்.

    இம்மாதிரி சாதாரண முயற்சிகளுக்கெல்லாம் தூக்கம் பிடிகொடுக்க மறுத்தால், உரிய மருத்துவ ஆலோசனையை பெறுவதும் நல்லது.

    இதையும் வாசிக்கலாமே...

    x