இன்று உலக தொலைக்காட்சி தினம்; இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!


உலக தொலைக்காட்சி தினம்

நம்மை அடிமையாக்க முயலும் தொலைக்காட்சி மற்றும் அதன் நிகழ்ச்சிகளில் இருந்து விடுபடுவது எப்படி என்பதை, உலக தொலைக்காட்சி தினமான இன்று (நவ.21) அறிந்து கொள்வோம்.

அனைவருக்குமான அனுபவம்

தொலைக்காட்சி இல்லாத வீடுகள் அரிது. அரசே இலவசமாக தொலைக்காட்சி வழங்கும் அளவுக்கு அதன் அத்தியாவசியம் விரிவடைந்திருக்கிறது. பொழுதுபோக்கு முதல் பயனுள்ள செய்திகள் வரை காட்சி அனுபவத்தில் நம்மை தொலைக்காட்சிகள் கட்டிப்போடக் கூடியவை.

இல்லங்களில் தொலைக்காட்சியை ரசிக்காதவர்கள் குறைவு. ரிமோட் கன்ட்ரோலுக்கு சண்டைகள் எல்லாம் நடக்கும். குழந்தைப் பருவத்தினரின் கார்ட்டூன் ரகங்களில் தொடங்கி, இளம் வயதினரின் இசை மற்றும் விளையாட்டில் வளர்ந்து, பெரியவர்கள் பார்க்கும் மெகா சீரியல் அல்லது செய்தி சேனல்கள் வரை சகலமானோரையும் தொலைக்காட்சிகள் திருப்தி செய்யக்கூடியவை.

உலக தொலைக்காட்சி தினம்

தொல்லைக்காட்சிகள்

ஆனபோதும், தொலைக்காட்சிகள் மனிதர்களை ஆதிக்கம் செய்யவும், அவர்களில் சிலரை அடிமையாக்கவும் செய்திருக்கின்றன. எனவே தொலைக்காட்சியை அளவோடு பயன்படுத்துவதும், பார்க்கும் காட்சிகளை தரமாக தேர்ந்தெடுப்பதும் பார்வையாளரின் கடமை.

முக்கியமாக குழந்தைப் பருவத்தினர் டிவி பார்ப்பதாலும், தரக் குறைவான நிகழ்ச்சிகளாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். படிப்பில் நாட்டம் குறைவது, மறதி, தவறான காட்சிகளால் திசை மாறும் வாய்ப்பு, மன அழுத்தம், தூக்கம் கெடுவது ஆகியவற்றுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கும் குழந்தைகள் ஆளாகிறார்கள்.

வளர்ந்தவர்களும் இதற்கு விதிவில்லக்கல்ல. மெகாத்தொடர்களால் எத்தனையோ குடும்பங்கள் அமைதி இழந்திருக்கின்றன, காட்டுக்கத்தலாய் விவாதிக்கும் செய்தி சேனல்களால் ரத்த அழுத்தம் எகிறுவோர் உண்டு. எனினும், ஸ்மார்ட் போன் காலத்திலும் தொலைக்காட்சிகள் அதன் மகத்துவத்தை இழக்கவில்லை.

விடுபடுவது எப்படி?

தொலைக்காட்சி பார்ப்பதற்கு என்று அன்றாடம் சிறு நேரத்தை ஒதுக்கி வைத்து, அந்த நேரத்தில் மட்டும் நிகழ்ச்சிகளை பார்ப்பது நல்லது. சாப்பிடும்போது தொலைக்காட்சிகளை தவிர்ப்பது அல்லது அணைத்துவிடுவது உத்தமம். குறிப்பாக குழந்தைகளின் சின்னத்திரை தரிசனத்துக்கான நேரத்தை கண்காணித்து வழிப்படுத்த வேண்டும்.

வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட தொலைக்காட்சி பெட்டிகளை தவிர்ப்பது நலம். ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து டிவி பார்ப்பதால், உடல்வாகில் மிகை பருமன் ஆளாவற்கும் வாய்ப்பகும். உடல் உழைப்புக்கான வாய்ப்புகளையும் தொலைக்காட்சிகள் பறித்துவிடக் கூடியவை. தரமான நிகழ்ச்சிகளை மட்டுமே பார்ப்பது, தொலைக்காட்சிக்கு ஒதுக்கும் நேரத்தை இனிமையாக்கும்.

உலக தொலைக்காட்சி தினம்

தொலைக்காட்சி தினம்

தொலைக்காட்சிகளின் பொற்காலமாக இருந்த 90களின் மத்தியில், அதாவது 1996-ம் ஆண்டு முதல் தொலைக்காட்சி தினத்தை கொண்டாடி வருகிறோம். நவ.21 தினத்தை தொலைக்காட்சி தினமாக அப்போது ஐநா அறிவித்தது. அன்றைய நாளில் தொலைக்காட்சி தொடர்பான விவாதங்கள் உலகமெங்கும் களைகட்டும்.

மக்கள் மத்தியில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், தொலைக்காட்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. தற்போதைய இணையத்தின் தலைமுறையிலும், செல்போன் திரையில் தொலைக்காட்சி அலைவரிசைகளை ரசிக்கும் அறிவியல் நுட்பத்துக்கு வளர்ந்திருக்கிறோம்.

உலக தொலைக்காட்சி தினத்தில் அவை தொடர்பாக விழிப்புணர்வு பெறுவோம்.

x