நடுவானில் விமானப் பணிப்பெண்ணுக்கு தொந்தரவு... போதை பயணி பெங்களூரு போலீசில் ஒப்படைப்பு


விமானப் பணிப்பெண்

விமானப் பணிப்பெண் மற்றும் சிப்பந்திகளின் எச்சரிக்கையையும் மீறி, நடுவானில் முறைகேடாக நடந்துகொண்டபோதை பயணியை, இண்டிகோ விமான சேவை நிறுவனம் பெங்களூரு போலீஸார் வசம் ஒப்படைத்தது.

ஜெய்ப்பூரில் இருந்து பெங்களூரு நோக்கி பறந்த இண்டிகோ விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்றில், நடுவானில் பிரச்சினை எழுந்தது. மது போதையில் உச்சம் தொட்ட பயணி ஒருவர், சக பயணிகள் மற்றும் விமானப் பணிப்பெண்ணிடம் முறைகேடாக நடக்க முயன்றார்.

விமானத்தில் பயணிகள்

இதனை விமானத்தின் இதர பயணிகள் மற்றும் சிப்பந்திகள் கண்டித்தபோதும் போதை ஆசாமி தனது நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. இறுதியாக விமானி எச்சரிக்கை விடுத்தபோதும், அந்தப் பயணி அடங்குவதாக தெரியவில்லை. இதனையடுத்து போதை பயணியின் போக்கின் ஊடாகவே அவரை ஒரு வழியாக சமாளித்த விமான ஊழியர்கள், விமானம் தரையிறங்குவதற்காக பொறுத்திருந்தனர்.

பெங்களூரு கெம்பெகவுடா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் தரையிறங்கியதும், விமான நிலையத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றிருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமானத்துக்கு விரைந்து வந்து போதை ஆசாமியை அள்ளிச் சென்றனர். பின்னர் பெங்களூரு போலீஸார் வசம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார். போதை ஆசாமியின் பின்னணி மற்றும் அவர் விமான சிப்பந்திகள் மற்றும் பயணிகளிடம் முறைகேடாக நடந்துகொண்ட விதம் ஆகியவை குறித்து தற்போதைக்கு போலீஸார் தகவல் ஏதும் தெரிவிக்க மறுத்துள்ளனர்.

இண்டிகோ விமானம்

கடந்த சில மாதங்களாகவே இந்திய விமானங்கள் மற்றும் இந்திய விமானப் பயணிகளை முன்வைத்து நடுவான் முறைகேடுகள் அதிகரித்து வருகின்றன. சக பயணி மீது சிறுநீர் கழிப்பு, பெண் பயணி மற்றும் விமான சிப்பந்திக்கு பாலியல் அச்சுறுத்தல், போதையில் அட்டூழியம் உள்ளிட்ட நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது சட்டம் ஒழுங்கு பிரிவுகளின் கீழான வழக்கமான நடவடிக்கைகளுக்கு அப்பால், அந்த பயணிக்கு குறிப்பிட்ட காலத்துக்கு விமானப் பயணத்துக்கு தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளன. ஆயினும் முறைகேடுகள் குறைந்தபாடில்லை.

இதையும் வாசிக்கலாமே...

x