அன்றாடம் போதுமான நேரம் உறங்காதவர்களுக்கு காத்திருக்கும் உபத்திரவங்கள்


தூக்கமின்மை

போதிய அளவுக்கு உறங்காத போது, அது உடல் மற்றும் மனநலனை நேரடியாக பாதிக்கக்கூடும். இப்படி தொடர்ச்சியாக தூக்கம் கெடுவது நிரந்தர பாதிப்புகளுடன் இயல்பு வாழ்க்கையை கெடுக்கவும் கூடும்.

ஒருவருக்கு முன்தினம் போதிய உறக்கம் கிட்டாததை அடுத்த நாள் அவரது முகமே காட்டிக்கொடுத்துவிடும். அவர் திறமையாக அதனை மறைத்தாலும், அன்னாரின் செயல்பாடுகள் அவற்றை அம்பலப்படுத்தும். அந்தளவுக்கு தூக்கம் கெடுவதன் எதிர்மறை விளைவுகள் பட்டியல் நீளமானது. எனவே நாள்பட்ட தூக்கமின்மை என்பது, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை அறிந்துகொள்வது அவற்றைத் தடுக்கவும் உதவக்கூடும்.

தூக்கமின்மையின் பாதிப்புகள்

அறிவாற்றல் அடிவாங்கும்: தூக்கமின்மை என்பது நினைவுத் திறன், கவனக் குவிப்பு, முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை பாதிக்கிறது. இது கவனம் செலுத்துவதில் சிரமம், உற்பத்தித்திறன் குறைதல் ஆகியவற்றை உருவாக்கும். பாடம் பயிலும் வயதில் மோசமான கல்வி கற்றல் சூழலைத் தரும். பணிபுரியும் வயது எனில் வேலை செயல்திறனில் சொதப்பச் செய்யும்.

விபத்துகளின் ஆபத்து: தூக்கமின்மை என்பது உடல் அவயங்களின் ஒருங்கிணைப்பை துண்டாடும். மேலும் உடனடி எதிர்வினைக்கான வாய்ப்புகளை குறைக்கும். வாகனம் ஓட்டுவது என்பது கண், காது, கவனம், கை - கால்கள் என சகல அவயங்களின் ஒருங்கிணைப்பை கோரக்கூடியது. மேலும் விபத்துக்கான வாய்ப்புகளை தவிர்ப்பதில் விரைந்து எதிர்வினையாற்றுவது தவிர்க்க இயலாதது. இந்த இரண்டும் தூக்கம் கெட்டவர்களிடம் எதிர்பார்க்க இயலாது. வாகனம் ஓட்டுவது மட்டுமன்றி அதற்கு இணையான ஆபத்தான பணிகளின்போதும், தூக்கம் கெட்டவர்கள், தங்கள் பணி சார்ந்த விபத்துக்கு அதிகம் ஆளாகிறார்கள்.

உடல் நோய் எதிர்பாற்றலுக்கு உலை வைக்கும்: நாள்பட்ட தூக்கமின்மை நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகிறது. இதனால் சாதாரண சளிக் காய்ச்சல் தொடங்கி, வீரியமான கொரோனா போன்ற தொற்றுகள் வரை தூக்கம் கெட்டவர்கள் எளிதில் இலக்காவார்கள்.

தூக்கமின்மை பிரச்சினையால் வாகனம் ஓட்டுவோருக்கு காத்திருக்கும் ஆபத்து

மூடு கெடும்: போதுமான தூக்கம் இல்லாதது சதா எரிச்சல், மனநிலை மாற்றங்கள், அதிகரித்த பதற்றம் மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட மனநலக் கோளாறுகளுக்கு வாசல் திறந்து வைக்கும்.

நிரந்தர நோயாளியாக்கும்: போதுமான தூக்கம் இல்லாதது ஒருவரை நாள்பட்ட நோய்களின் ஆபத்துக்கு ஆளாக்கும். குறிப்பாக இதய நோய்கள், நீரிழிவு மற்றும் சில வகையான புற்றுநோய்கள் போன்றவற்றின் பின்னணியில், நீண்டகாலமாக தூக்கம் கெடுவதும் இருப்பதை ஆய்வு உண்மைகள் வெளிப்படுத்தி உள்ளன.

இதையும் வாசிக்கலாமே...


தேர்தல் 2024 | மகனை ஸ்கூலுக்கு அனுப்பற மாதிரி ஜெயிலுக்கு அனுப்பிருக்காரு... நடிகர் வடிவேலு பேச்சு!

கனிமொழி எம்பி பங்கேற்ற கூட்டத்தில் போதை ஆசாமி ரகளை; வைரலாகும் வீடியோ!

x