திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்திருந்து இயற்கை அழகினைக் கண்டு ரசித்து செல்கின்றனர்.
இங்கு மூஞ்சிக்கல், உகார்த்தேநகர், செண்பகனூர், வெள்ளி நீர் வீழ்ச்சி, புலிச்சோலை, பெருமாள்மலை உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் செல்லும் பிரதான சாலையே பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த சாலை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
இதனால், சுற்றுலாப்பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்துள்ளனர். இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் சாலையைச் சீரமைக்காமல், சாலையில் உள்ள குழிகளில் மண்கள் கொண்டு நிரப்பியுள்ளனர்.
இதனால், சாலை மீண்டும் குழியாக மாறுவதாகவும், கண்துடைப்பிற்காக அதிகாரிகள் இந்த சாலைகளில் மண்களை நிரப்புவதாகவும் அப்பகுதி மக்களும், சுற்றுலாப்பயணிகளும் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை நெடுஞ்சாலை துறையினர் கவனத்தில் கொண்டு குண்டும் குழியுமாக, உள்ள சாலையை தரமான முறையில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.