திருமணமான மகள் பெற்றோரை சார்ந்திருப்பதை உறுதிப்படுத்துவது கடினம்... உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை!


சென்னை உயர்நீதிமன்றம்

திருமணமான பெண், பொருளாதாரத்திற்காக தந்தையை சார்ந்திருக்கிறார் என்பதை நிரூபிக்க பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்

தந்தை இறந்ததால் கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த கனரா வங்கி உத்தரவை எதிர்த்து பிரியா என்பவர், கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் பதிலளித்த கனரா வங்கி, திருமணமான பெண், தந்தையின் வருமானத்தை சாராதவராக இருந்தால், கருணை அடிப்படையில் பணி வழங்க முடியாது என தெரிவித்திருந்தது

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, "திருமணமான பெண்களுக்கும் கருணை அடிப்படையில் வேலை வழங்கலாம் என்பதன் மூலம் முதல் நிலை சவாலை கடந்துவிட்டாலும், தந்தையின் வருமானத்தை சார்ந்திருந்தார் என்பதை நிரூபிக்க வேண்டிய மற்ற சவால்கள் தொடர்கின்றன. ஒரு ஆண் திருமணத்திற்கு பிறகு தந்தையுடன் வாழ்வது இயல்பாகிவிடும் நிலையில், மணமான பெண் தன் பெற்றோருடன் வசிக்க முடிவெடுத்துவிட்டால் அது அசாதாரணமானதாகக் கருதப்படுகிறது.

கோப்புப்படம்

மருத்துவம், கல்வி உள்ளிட்டவற்றிற்காக பெற்றோரை சார்ந்து திருமணமான ஒரு பெண் இருந்துவந்தாலும், கருணை அடிப்படையில் வேலை கேட்கும் போது, பெற்றோரை சார்ந்திருப்பதை உறுதிப்படுத்துவது கடினமான பணியாகிறது. திருமணமான பெண்களுக்காக பெற்றோர்கள் செய்யும் பங்களிப்புகள் கவனிக்கப்படாமலும், கணக்கில் கொள்ளப்படாமலும், அங்கீகரிக்கப்படாமலும் இருக்கிறது. ஒருவேளை அவற்றை வெளிப்படுத்தினால் மகளின் புகுந்த வீட்டின் கண்ணியக் குறைவானதாகக் கருதப்படுவது பிற்போக்குத்தனமானது.

இதுபோன்ற கலாச்சார ரீதியிலான சிக்கலான விவகாரங்களில் பிடிவாத அணுகுமுறை இல்லாமல், அனுதாப அடிப்படையிலான அணுகுமுறை அவசியம். கருணை அடிப்படையில் பணி வழங்க கோரிய பிரியாவின் விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து, அவரது தகுதிக்கு ஏற்ற பணிக்கான நியமன ஆணையை 6 வாரத்தில் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.


இதையும் வாசிக்கலாமே...

x