ஆளில்லாமல் தவித்த பாகிஸ்தான் ஹாக்கி அணி... ஆபத்தில் உதவிய தமிழர்...!


ராஜ்கமல்

உடற்பயிற்சியாளர் இல்லாமல் வந்து தவித்து நின்ற பாகிஸ்தான் ஹாக்கி அணியினருக்கு ஆபத்து காலத்தில் உதவி இருக்கிறார் ராஜ்கமல் என்ற தமிழர்.

சென்னையில் ஆகஸ்ட் 3ம் தேதி துவங்கி நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டி தொடர் இம்மாதம் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியா வந்திருக்கிறது.

சென்னை வந்து இறங்கிய ஹாக்கி அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களுடன் வரவேண்டிய உடற்பயிற்சியாளர் விசா பிரச்சினை காரணமாக வர இயலவில்லை. துணை உடற்பயிற்சியாளரும், அவரது சொந்த காரணங்களால் கடைசி நேரத்தில் பாகிஸ்தான் அணியினருடன் சேர முடியவில்லை.

இதனால் என்ன செய்வது? வீரர்களின் உடல் நலம் எப்படி பராமரிப்பது என்று தெரியாமல் பாகிஸ்தான் அணி தவித்து நின்றது. தங்களின் இக்கட்டான நிலை குறித்து தமிழ்நாடு ஹாக்கி சம்மேளனத்திடம் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் அணியின் சூழ்நிலையை புரிந்து கொண்ட தமிழ்நாடு ஹாக்கி சம்மேளனம் உடனடியாக செயல்பட்டு தங்கள் அணியில் உடற்பயிற்சியாளராக இருக்கும் ராஜ்கமல் என்ற நிபுணரை பாகிஸ்தான் அணியின் உடற்பயிற்சி நிபுணராக பணிபுரிய அனுமதி அளித்திருக்கிறது. நடந்து முடிந்த டிஎன்பிஎல் லீக் தொடரில் ராஜ்கமல் நெல்லை அணிக்காக உடற்பயிற்சி பராமரிப்பாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரும் பாகிஸ்தான் வீரர்கள் என்று பார்க்காமல் அவர்களுக்கு உடற்பயிற்சியாளராக பணிபுரிய சம்மதம் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் அணி விளையாடும் முதல் போட்டிக்கு ஒரு நாள் முன்பு ராஜ்கமல் அந்த அணியின் உடற்பயிற்சியாளராக இணைந்தார். பாகிஸ்தான் வீரர்கள் என்று பார்க்காமல் அவர் ஆற்றிய பணிகள், பாகிஸ்தான் அணி வீரர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. ராஜ்கமல் தங்களுக்கு மிகப் பெரிய உதவியைச் செய்ததாகவும், கடவுளால் அனுப்பப்பட்ட நபராகவே அவரை கருதுவதாகவும் பாகிஸ்தான் ஹாக்கி அணியினர் தெரிவித்துள்ளனர்.

x