தமிழகத்தில் பிசியோதெரபிஸ்ட்களுக்கு நல வாரியம் அமைக்கப்படுமா? - வலுக்கும் கோரிக்கை


மதுரை: மத்திய, மாநில அரசுகள் பிசியோதெரபி மருத்துவம் மீது கூடுதல் கவனம் செலுத்தி மக்களுக்கு முழு பயன்களும் சென்றடைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு, பிசியோதெரபிஸ்ட்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இன்றைய நவீன உலகின் சவால்களான நகராத நிலையில் வேலை செய்வது, மன அழுத்தம் சம்பந்தமான உடல் இயக்க சம நிலை பாதித்தல், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவற்றால் ஏற்படும் இயக்க நிலை பாதிப்புகளை சமாளிக்கும், சிறந்த வாழ்நிலையை பரிசளிக்கும் மருந்தில்லா மருத்துவமாக பிசியோதெரபி மருத்துவம் உயர்ந்து நிற்கிறது. மத்திய, மாநில அரசுகள் பிசியோதெரபி மருத்துவம் மீது கூடுதல் கவனம் செலுத்தி மக்களுக்கு முழு பயன்களும் சென்றடைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உலக பிசியோதெரபி தினம் முன்னிட்டு, பிசியோதெரபிஸ்ட்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோதெரபிஸ்ட்கள் சங்கம் தமிழ்நாடு கிளை தலைவர் வெ.கிருஷ்ணகுமார் கூறியதாவது: “மருத்துவத் துறையில் சிறு, குறு தொழிலான பிசியோதெரபி சேவைக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். பிசியோதெரபி கிளினிக்குகளுக்கு தொழில் பாதுகாப்பு முற்றிலும் கிடைத்திட வழி வகை செய்ய வேண்டும். பிசியோதெரபி கிளினிக் தொடங்க ஊக்கத்தொகை குறைந்தது ரூ.50,000 வரை வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிசியோதெரபி மருத்துவர்கள் இல்லங்கள் தேடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. தங்களது இருப்பிடங்களுக்கு பிசியோதெரபி மருத்துவர்களை அழைத்து பலன் பெற வேண்டிய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நல வாரியம் ஒன்றை அமைத்து பிசியோதெரபிஸ்ட்களுக்கு அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

பெண் பிசியோதெரபிஸ்ட்களும் இருப்பிடங்களுக்கு சென்று சிகிச்சை அளித்து வருவதால் உயிர், உடமை பாதுகாப்புக்கு சிறப்பு திட்டங்கள் தந்து இருப்பிடங்களை நாடி சிகிச்சை அளிக்கும் நடைமுறை தயக்கமின்றி தொடர தமிழக முதல்வர் ஆவண செய்ய வேண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு அலுவலகங்கள், உயர்நீதிமன்றம், நீதிமன்ற கிளைகளில் இடம் ஒதுக்கி தந்து அவற்றில் பிசியோதெரபி கிளினிக்குகளை தனியார் முதலீடு உதவியுடன் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இங்கு பணிபுரியும் ஊழியர்கள் பலன் பெறுவதோடு பொது மக்களுக்கும் பொது தொடர்பு பிசியோதெரபி ஆலோசனை மையமாகவும் செயல்படும். Repetitive Strain Injury அதாவது ஒரே இயக்கத்தை தொடர்ந்து வேலை நிமித்தமாக செய்வது அல்லது ஒரு சில பகுதிகளை அதிகமாக பயன்படுத்துவதால் எடுத்துக்காட்டாக கம்யூட்டர் மவுஸ் பயன்பாடு தசை, தசை நாண் மற்றும் நரம்பு பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. வலி மற்றும் இயக்க சிக்கல்களால் பல்வேறு சிரமங்களை சந்திப்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள்.

வேலையிட தன்மையால் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அல்லது பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்ள கட்டண ரீதியாக உதவுதல் சம்பந்தமாக லேபர் சட்டங்களில் புதிய சரத்துகளை அறிமுகப் படுத்த வேண்டும். தமிழக அரசின் மருத்துவ நிறுவனங்கள் ஒழுங்கு முறை சட்டம் கீழ் பிசியோதெரபி கிளினிக்குகள் ரூ.5,000 செலுத்தி பதிவு செய்து ஒப்புகை சீட்டு மட்டுமே பல ஆண்டுகளாக கையிருப்பில் உள்ளது.

இதுவரை பதிவு சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் பதிவு செய்த பிசியோதெரபி கிளினிக்குகளுக்கு பதிவு சான்றிதழ் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் குறித்து தீவிரமாக பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்" என்று பிசியோ தெரபிஸ்ட்கள் கூறினார்.

x