தினசரி அரைகுறையாக தூங்குவோர் கவனத்துக்கு... தூக்கம் தவிர்ப்போருக்கு துக்கம் காத்திருக்கும்


தூக்கமின்மை

அளவான உணவு, உழைப்பு ஆகியவற்றுடன் உறக்கமும் மனிதர்களுக்கு அத்தியாவசியமாகிறது. இவற்றில் மிகையினும், குறையினும் மனிதர்களுக்கு எழும் பாதிப்புகள் ஏராளம். முதல் இரண்டில் கூட உஷாராக இருக்கும் மக்கள், தூக்கத்தில் ஏனோ கோட்டை விடுகிறார்கள்.

நாள் தோறும் குறைந்தபட்ச தூக்கத்தை உறுதி செய்யாதவர்களுக்கு, பின்னாளில் அதற்காக துக்கம் கொள்ள வேண்டிய அளவுக்கு எதிர்மறை விளைவுகள் அவர்களை பாதிக்க காத்திருக்கும்.

நாள்தோறும் அளவான தூக்கத்தை உறுதிசெய்து கொள்வது, ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும், நல்வாழ்வுக்கும் நலம் பயக்கும். உடல் தன்னைத்தானே பழுதுபார்த்துக்கொள்ள, ஓய்வெடுக்க, இழந்த உணர்வுகளை உயிர்ப்பிக்க... தூக்கம் அத்தியாவசியம். இன்னும் அறிவாற்றல் செயல்பாடு, நினைவுத் திறனில் ஒருங்கிணைப்பு, சீரான ஹார்மோன் சுரப்பு, கட்டுக்குலையாத நோயெதிர்ப்பு செயல்பாடு... என மனிதரின் நல்வாழ்வுக்கு சரியான தூக்கம் உத்தரவாதமளிக்கும்.

தூக்கமின்மை

நாள்தோறும் அவசியமான தூக்கம் என்பது தனிநபர்களைப் பொறுத்தளவில் மாறுபடக் கூடும். ஆனால் ​​சராசரியாக, பெரியவர்களைப் பொறுத்தளவில் குறைந்தது 7 மணி நேரத் தூக்கம் அவசியமாகிறது. அதுவே 8 மணி நேரமாக இருப்பின் நலம். தனிப்பட்ட உடல்தேவைகளைப் பொறுத்தளவில் பலருக்கும் 9 மணி நேரத் தூக்கம் அவசியமாக்கூடும். எவ்வாறாயினும், அன்றாடம் குறைந்தபட்ச தூக்கமான 7 மணி நேரத் துயில் என்பதை தவிர்க்காமலிருப்பது நல்லது.

இதிலும் எவ்வளவு நேரம் படுக்கையில் கிடக்கிறோம், தூங்குவதாக பேர் செய்கிறோம் என்பதை விட, ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்கிறோம் என்பதே அவசியம். இரவில் ஆழ்ந்து உறங்கி காலையில் எழும்போது ஒருவரது மனதும், உடலுமே ஆழ் துயிலுக்கான அறிகுறிகளை காட்டிவிடும். அடுத்த நாளை உற்சாகமாக தொடங்க முடிந்தால், அன்றைய தினம் சோம்பல், களைப்பு இன்றி செயல்பட முடிந்தால் முந்தைய இரவு முழு உறக்கம் வாய்க்கப்பெற்றதை உணரலாம்.

ஆழ்ந்த உறக்கம்

உடல் மற்றும் மனதின் மறுசீரமைப்பிற்கு முக்கியமானது தூக்கம். காலக்கிரமத்தில் வாகனங்களை சர்வீஸ் செய்வதுபோல, உடலும் மனதும் அன்றாடம் சுயமாக சர்வீஸ் செய்துகொள்ள ஆழ்ந்த உறக்கம் உதவும். என்றேனும் ஒரு நாள் தூக்கம் குறைவதால் பெரும் பாதிப்பு ஏற்படப்போவதில்லை. தூக்கம் குலைவது அன்றாடம் வாடிக்கையாக தொடருமெனில், துக்கத்தில் ஆழ்த்தும் வகையிலான ஆரோக்கிய கேடுகள் வரிசை கட்டும். அவற்றைத் தவிர்க்கும் நோக்கில், தூக்கத்தை அலட்சியப்படுத்தாது படுக்கைக்குச் செல்வது அவசியம்.

x