சோழபுரத்தில் காவல் நிலையம் கட்டுவதற்கு ரூ.2 கோடி மதிப்பிலான இடத்தை இலவசமாக வழங்கிய தொழிலதிபர்


சோழபுரம் காவல் நிலையத்துக்கு நிரந்தரக் கட்டிடம் கட்ட ரூ.2 கோடி மதிப்பிலான இடத்தை இலவசமாக வழங்கி, அதற்கான பத்திரத்தை போலீஸாரிடம் நேற்று ஒப்படைத்த தொழிலதிபர் ஷாஜகான்.

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த சோழபுரம் காவல்நிலையத்துக்கு நிரந்தரக் கட்டிடம்கட்டுவதற்காக, ரூ.2 கோடி மதிப்பிலான இடத்தை தொழிலதிபர் ஒருவர் இலவசமாக வழங்கி உள்ளார்.

2021-ல் கும்பகோணம் தாலுகா காவல் நிலைய சரகத்துக்குள் இருந்த சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, சோழபுரம் காவல் நிலையம் உருவாக்கப்பட்டது. வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வரும் சோழபுரம்காவல் நிலையத்துக்கு சொந்தமான கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கும்பகோணம் வட்டம் சோழபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அ.ஷாஜகான்(68) என்பவர், தற்போது காவல் நிலையம் செயல்படும் இடத்துக்கு அருகே உள்ள, தனக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான 20 ஆயிரம் சதுரடி பரப்பு கொண்ட நிலத்தை காவல் நிலையக் கட்டிடம்கட்ட இலவசமாக வழங்கியுள்ளார். திருவிடைமருதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று அந்தஇடத்தை சோழபுரம் காவல் நிலையம் பெயரில் பதிவு செய்து,அந்தப் பத்திரத்தை திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜி.கே.ராஜு, திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் கரிகாலச்சோழன் ஆகியோரிடம் ஷாஜகான் வழங்கினார். தொடர்ந்து, தொழிலதிபர் ஷாஜகானை, காவல் துறையினர், சமூக அமைப்பினர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்

x