கெட்ட வார்த்தையால் திட்டிய டிஎஸ்பி... கொதிக்கும் ஒட்டன்சத்திரம் விவசாயிகள்!


போராட்டம் நடத்திய விவசாயிகளை குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸார்

தனியார் காற்றாலை நிறுவனம் மூலம் அமைக்கப்படும் மின்கம்பங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகளை துணை காவல் கண்காணிப்பாளர் கெட்ட வார்த்தையால் திட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அப்பியம்பட்டி பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின்சாரத்தை, தனியார் துணை மின் நிலையத்திற்கு எடுத்து செல்ல உயர் அழுத்த மின்கம்பங்கள் நடும்பணிகள் நடைபெற்று வருகிறது. குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் அருகே உயர் மின்னழுத்த கம்பங்கள் வருவதால் பெரும் பாதிப்பு ஏற்படும் என அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பெண்கள் கைது

இதையடுத்து அவர்கள் ஒன்று திரண்டு மின்கம்பங்கள் அமைப்பதை கடந்த வாரம் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வந்த தனியார் காற்றாலை நிறுவனத்தினர், மின்கம்பங்களை அமைக்க நேற்று மீண்டும் முயற்சி செய்தனர். இதை அறிந்து அங்கு கூடிய பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள், பணிகளைத் தடுத்து நிறுத்தி அங்கு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்புக்காக வந்திருந்த கள்ளிமந்தயம் போலீஸார் அந்த பெண்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். அப்போது மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மயங்கி விழுந்த மூதாட்டி

மேலும் வலுக்கட்டாயமாக விவசாயிகளை போலீஸார் கைது செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒட்டன்சத்திரம் காவல் துறை கண்காணிப்பாளர் முருகேசன் என்பவர், விவசாயி ஒருவரை கெட்ட வார்த்தையால் திட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

பொதுத்தேர்வில் வெற்றிக்கான முக்கிய குறிப்புகள்!

x