குரங்கு காய்ச்சலால் உயிரிழப்பு 3 ஆக உயர்வு... கர்நாடகாவில் மக்கள் பீதி!


குரங்குகள்

கர்நாடகாவில் வேகமாக பரவி வரும் குரங்கு காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கே.எப்.டி எனப்படும் கியாசனூர் வனப்பகுதி நோய் என்ற நோய் வேகமாக பரவி வருகிறது. பொது மக்களிடையே குரங்கு காய்ச்சல் என்று அழைக்கப்படும் இந்த நோய், கர்நாடகாவின் ஷிவமோகா, சிக்கமகளூரு, உத்தர கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிக அளவில் பரவி வருகிறது. இந்த தொற்று ஏற்பட்ட ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவும் இந்த நோய் காரணமாக, ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்திரை

குறிப்பாக வனப்பகுதியில் வனப் பொருட்களை சேகரிக்க செல்லும் மக்கள் மூலமாக இந்த நோய் பரவுவதாக கூறப்படுகிறது. எனவே, வனப்பகுதிக்குள் செல்வோர் வேப்ப எண்ணெய்யை உடலில் தடவிக்கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நோய்க்கு போதுமான தடுப்பூசிகள் இல்லாததால் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாகவும், இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் ஏற்கெனவே குரங்கு காய்ச்சல் நோய்க்கு இரண்டு பேர் உயிரிழந்திருந்த நிலையில் இன்று ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.

ஷிவமோகா அரசு மருத்துவமனை

சிக்கமகளூரு மாவட்டத்தின் கோப்பா தாலுகாவின் நுக்கி கிராமத்தில், கொட்டமா என்ற பெண், குரங்கு காய்ச்சல் நோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து ஷிவமோகா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து குரங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 6 பேர் நோய் பாதிப்பு காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 12 வயதுக்கு குறைவான குழந்தைகளை இந்த நோய் வேகமாக தாக்கும் என்பதால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.

x