கொடைக்கானலில் கோடை விழா படகு அலங்கார போட்டி!


திண்டுக்கல்: கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி சுற்றுலாத் துறை சார்பில் படகு அலங்கார போட்டி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மே 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கோடை விழாவையொட்டி தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 7-வது நாளான இன்று (மே 23) சுற்றுலாத் துறை சார்பில் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு அலங்கார போட்டி நடைபெற்றது.

படகு அலங்கார போட்டியில் கலந்துகொள்ள அனைத்து துறைகளுக்கும் அழைப்பு விடுத்தாலும் ஆண்டுதோறும் ஒரு சில துறைகள் ஏனோ ஆர்வம் காட்டுவதில்லை. ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தோட்டக்கலைத் துறை, மீன் வளத்துறை, சுற்றுலாத் துறை சார்பில் படகுகள் பங்கேற்றன.

படகுகளின் அலங்கார அணி வகுப்பு மற்றும் போட்டியை கொடைக்கானல் கோட்டாட்சியர் சிவராம் தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் சத்தியநாதன், வட்டார வளர்ச்சி ஆணையர் பாலகிருஷ்ணன், தோட்டக்கலை துணை இயக்குநர் காயத்ரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜன், உதவி அலுவலர் சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படகு அலங்காரப் போட்டியில் ஊராட்சி ஒன்றியம் முதல் பரிசும், மீன்வளத்துறை இரண்டாம் பரிசும், சுற்றுலாத்துறை மூன்றாம் பரிசும் பெற்றன. ஏரியில் வலம் வந்த படகு அலங்கார அணி வகுப்பை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். நாளை (மே 24) மீன்பிடித்தல் போட்டி, நாளை மறுதினம் (மே 25) படகு போட்டி நடைபெற உள்ளது.

x