அரசின் இந்த சலுகையை பெற ஆகஸ்ட் 15 வரை அவகாசம்... முதல்வர் அறிவிப்பு!


அவகாசம் நீட்டிப்பு!

குறுவைத் தொகுப்பு திட்டத்தை விவசாயிகள் பெற்றிட ஏதுவாக ஆகஸ்ட் 15 ம் தேதி வரை அதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொள்ள ஏதுவாக தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக குறுவைத் தொகுப்பை அறிவித்து வருகிறது. இந்த தொகுப்பைப் பயன்படுத்தி விவசாயிகள் செலவைக் குறைத்து அதிக மகசூல் ஈட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் 12-ம் தேதி, சேலத்தில் மேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தாண்டு ரூ.75.95 கோடியில் குறுவைத் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

இத்திட்டத்தின் கீழ், ரூ.75.95 கோடி மதிப்பில் 2.50 லட்சம் ஏக்கருக்கு 30 ஆயிரம் டன் உரங்கள் ரூ.61.65 கோடி மதிப்பில் 100 சதவீதம் மானியத்துடன் வழங்கப்படும். நெல் விதைகளை பொறுத்தவரை, விதை கிராமத் திட்டத்தில் 2,000 டன்னும், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் 478 டன்னும் என 2,478 டன் விதைகள் 50 சதவீத மானியத்தில் 1.29 லட்சம் ஏக்கருக்கு வழங்கப்படுகிறது.

மாற்றுப்பயிர் சாகுபடி பரப்புக்குத் தேவையான சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துகளுக்கான விதைகள் மாநில நிதி மூலம் 50 சதவீத மானியத்தில் 2.88 கோடியில் வழங்கப்படும். ரூ.50லட்சம் மதிப்பில் 6,250 ஏக்கர் பரப்புக்கான பசுந்தாள் உர விதைகள் வழங்கப்படும். 747 வேளான் இயந்திரங்கள் ரூ.6.44 கோடி மதிப்பில் வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த குறுவை சாகுபடி திட்டத்தின் மூலம் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த இலக்கு இன்னும் எட்டப்படவில்லை. அதனால் மேலும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று திருச்சியில் வேளாண் சங்கமம் 2023 கண்காட்சியை திறந்து வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 15 வரை இந்த திட்டத்திற்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

x