அன்றாடம் ‘மோமோஸ்’ வாங்கி வர மறந்த கணவன்... போலீஸில் புகார் அளித்தார் புது மனைவி; கடைசியில் அரங்கேறிய சுவாரசியம்


மோமோஸ்

\மனைவிக்குப் பிடித்த மோமோஸ் பலகாரத்தை அன்றாடம் வாங்கி வர மறந்த கணவன் மீது, அவரது இளம் மனைவி புகார் அளித்த விவகாரம் இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

புது மனைவி விரும்பியதை அவர் மனம் கோணாது வாங்கி வருவது கணவர்களின் கடமையாக கருதப்படுகிறது. அதிலும், திருமணமான ஆரம்ப ஆண்டுகளில் இந்தப் போக்கு தூக்கலாகவே இருக்கும். ஆனால் ஒரு பிரகஸ்பதி கணவன் அப்படியான கடமையை மறந்ததில், அவனது மனைவி காவல் நிலையம் வரை சென்று புகார் அளித்துள்ளார். போலீஸாரும் இந்த விவகாரத்தை குடும்ப நல கவுன்சிலர்கள் பக்கம் அனுப்பி வைத்து சுமூகம் ஏற்பட முயன்றுள்ளனர்.

கணவன் - மனைவி சண்டைக்கு வித்திட்ட மோமோஸ்

ஆக்ராவில் நிகழ்ந்து இந்த சுவாரசிய சம்பவத்தில், புகாருக்கு ஆளான கணவன் மற்றும் காவல்துறையில் புகார் செய்த மனைவி ஆகியோரின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின் நலன் கருதி போலீஸார் தவிர்த்துள்ளனர். ஆனால் இதர இளம்சோடிகளுக்கு பாடமாக இருக்கட்டுமே என்று வழக்கு விவரங்களை பொதுவில் பகிர்ந்துள்ளனர். அதன்படி திருமணமாகி 8 மாதங்களே ஆன இளம் தம்பதியர் மத்தியில் வித்தியாசமான காரணத்தை முன்வைத்து பிரச்சினை எழுந்துள்ளது.

திருமணமானது முதலே அன்றாடம் பணி முடித்து வீடு திரும்பும் கணவன், தனது மனைவிக்குப் பிடித்த மோமோஸ் தின்பண்டத்தை வாங்கி வருவான். வடக்கில் பிரபலமாக இருக்கும் இந்த மோமோஸ் தற்போது தமிழ்நாடு உணவகங்கள் வரை பரவியிருக்கிறது. திபெத்திய பின்னணியிலான இந்த உணவு, சீன உணவகங்களில் சிறப்பான ருசியுடன் தயாரிக்கப்பட்டு விற்பனையாகிறது.

மைதா மாவுக்குள் பொதிந்த சைவம் அல்லது அசைவ ரகத்தை அப்படியே வேக வைத்து ருசிக்கும்படி தருவதே மோமோஸ். இதனை திருமணமான புதிதில் கை நிறைய வாங்கி வந்த கணவன், நாளாக அதனை மறந்து வெறுங்கையோடு வீடு திரும்ப ஆரம்பித்திருக்கிறான். இதனால் கணவனுக்கு தன் மீதான பிரியம் வறண்டு விட்டதாக சீற்றம் கண்ட மனைவி அவனுடன் சண்டையிட்டு தாய் வீடு சென்றார். அங்கேயும் மனம் ஆறாது காவல் நிலையம் சென்று புகார் செய்திருக்கிறார்.

திருமண ஜோடியின் வயதினையும், திருமணமாகி சில மாதங்களே ஆகியிருப்பதையும் அறிந்த போலீஸார் இந்த விவகாரத்தை குடும்ப நல ஆலோசகர்கள் விசாரணைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே பஞ்சாயத்துக்காக கணவன் - மனைவி இருவரும் அழைக்கப்பட்டனர். கடந்த ஓரிரு மாதங்களாக பணி அழுத்தம் காரணமாக அலுவலகத்திலிருந்து கிளம்ப தாமதமாவதாகவும், அதனால் கடையில் மோமோஸ் கிடைப்பதில்லை என்றும் கணவர் தன் தரப்பு நியாயத்தை புலம்பியிருக்கிறார்.

ஆனால் இந்த சொத்தை காரணத்தை இளம் மனைவி ஏற்பதாக இல்லை. எனவே அவரை சமாதானம் செய்யும் வகையில், ’குறைந்தது வாரம் இரு முறையேனும் மனைவிக்குப் பிடித்த மோமோஸ் உடன் கணவன் வீடு திரும்ப வேண்டுமென’ குடும்ப நல ஆலோசகர்கள் உத்தரவிட்டு விவகாரத்தை முடித்து வைத்தனர். இதனை கணவன் - மனைவி இருவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டதில், கணவன் வீட்டுக்கு மனைவி திரும்பியிருக்கிறார்.

x