அரசு மருத்துவமனையிலேயே 2 குழந்தைகளையும் பெற்றெடுத்த கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி... குவியும் பாராட்டு!


ஐபிஎஸ் நந்தினி

கர்நாடகாவில் தனது இரண்டு குழந்தைகளையும் அரசு மருத்துவமனையில் பெற்றெடுத்த ஐபிஎஸ் அதிகாரி நந்தினிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அரசு ஊழியர்களுக்கு சிறந்த முன் உதாரணமாகவும் அவர் மாறியுள்ளார்.

அரசு மருத்துவமனை

அரசு மருத்துவமனைகள் என்றாலே இங்கு ஒரு பொதுபிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. தூய்மையாக இருக்காது, ஊழியர்கள் லஞ்சம் கேட்பார்கள், செவிலியர்கள் சிடுசிடுவென இருப்பார்கள், மருத்துவர்கள் சரியாக பார்த்து சிகிச்சை கொடுக்க மாட்டார்கள், எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும், உரிய மருத்துவ உபகரணங்கள் இருக்காது என்று அதன் பட்டியல் வெகுநீளமாக போகும்.

இதை எல்லாம் மீறி பல்வேறு அரசு மருத்துவமனைகள் சிறந்த மருத்துவ சேவையை அளித்து வருகின்றன. மருத்துவத்தை ஒரு சேவையாக வழங்கும் மருத்துவர்களும் உள்ளனர். தனியார் மருத்துவமனையில் அளிக்க முடியாத சவாலான சிகிச்சைகளையும் திறம்பட கையாண்டு அரசு மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், சில எதிர்மறையான விசயங்களால் நம்மிடையே பல பேர், அரசு மருத்துவமனைக்கு செல்வதே மரியாதைக் குறைவாகவும், சிகிச்சை சரி இருக்காது என்று உயிருக்கு பயந்தும், லட்சக்கணக்கில் செலவானாலும் பரவாயில்லை என தனியார் மருத்துவமனைக்கு செல்லும் மனநிலை நம்மிடையே உள்ளது. அன்றாட வாழ்வை கழிக்கவே சிரமப்படும் மக்கள் கூட, தனியார் மருத்துவமனைகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தும் கூட, தனது இரண்டு குழந்தைகளையும் அரசு மருத்துவமனையில் பெற்றெடுத்து, அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் முன் உதாரணமாக இருக்கிறார் நந்தினி

சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம்

கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர்தான் நந்தினி. எளிய பின்னணியை சேர்ந்த இவர், பல போராட்டங்களுக்கு மத்தியில் அரசுத் தேர்வுக்கு படித்து, 2016ல் சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். ஐஏஎஸ் அதிகாரியான அவர், தற்போது கர்நாடகா மாநில வணிக வரித்துறையில் கூடுதல் ஆணையராக செயல்பட்டு வருகிறார். பெங்களூருவில் வசித்து வரும் இவர் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு கடந்த 16ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, பெங்களூரு வாணிவிலாஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மறுநாள் நந்தினிக்கு சுகபிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை 3 கிலோ எடையில் இருந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர். அதன்பிறகு 18ம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு சென்றார். இவர் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பல்லாரி மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றினார். அந்த சமயத்தில் அவர் பல்லாரி அரசு மருத்துவமனையில் முதல் குழந்தையை பெற்றெடுத்தார். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தும்கூட, 2 குழந்தைகளையும் அரசு மருத்துவமனையில் பெற்றெடுத்து முன்னுதாரணமாக மாறியுள்ளார். இதன் மூலம் அரசுமருத்துவமனைகள் மீது மக்களின் கவனத்தை திருப்பியுள்ளார் அவர்.

ஐபிஎஸ் அதிகாரி நந்தினி

இதற்கு எப்படி மனது வந்தது அவரிடம் கேட்டபோது, "அரசு மருத்துவமனை என்பது தனியாருக்கு நிகராகவும் சில இடங்களில் தனியார் மருத்துவமனையை விடவும் கூடுதல் வசதிகளுடன் இயங்கி வருகிறது. இந்த வசதியை நாம் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசின் ஒரு அங்கமாக நான் இருக்கும் நிலையில் அரசு வசதியை பயன்படுத்தி கொண்டு முன்னுதாரணமாக இருக்க வேண்டியது அவசியம். அரசு அதிகாரியாக இருக்கும் என்னை போன்றவர்கள் இத்தகைய அரசு திட்டங்களை பயன்படுத்தும்போது அது இன்னும் சிறப்பாக செயல்படுத்தப்படும்'' என்றார். இவரைப் போன்று பல அரசு அதிகாரிகள், அரசு மருத்துவமனைக்கு சென்றால், மருத்துவமனையின் சிகிச்சையிலும், தரத்திலும் கண்டிப்பாக மாற்றங்கள் நிகழும்.

இதையும் வாசிக்கலாமே...
பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி!

300 கிலோ எடை, ஆறரை அடி உயரம்... ஜெயலலிதா உருவத்தில் பிரம்மாண்ட கேக்!

x