செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் லிஃப்ட் பழுது: நோயாளிகள், பார்வையாளர்கள் தவிப்பு


செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லிஃப்ட் பழுதானதால் நோயாளிகள், பார்வையாளர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

செங்கல்பட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். புறநோயாளிகள் பிரிவு தனி கட்டிடத்திலும், நான்கு தளங்களைக் கொண்ட மற்றொரு கட்டிடத்தில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் உள்நோயாளிகள் பிரிவு உட்பட இதர சில பிரிவுகளும் செயல்பட்டு வருகிறது.

இந்தக் கட்டிடத்தில் தாய் சேய் வார்டு அருகே ஒன்று, பிரதான நுழைவு வாயில் பகுதியில் ஒன்று என இரண்டு லிஃப்ட்டுகள் உள்ளன இதில் தாய் சேய் வார்டு அருகே உள்ள லிஃப்ட் செயல்பாட்டில் இல்லை. இதனால் செயல்பாட்டில் உள்ள வாயில் பகுதி லிஃப்ட் வழியாக மருத்துவர்கள், நோயாளிகள் அனைவரும் மேல் தளத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன்கள் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகள் மேற்கொள்வதற்கும் மேல் தளத்தில் இருப்பவர்கள் கீழ் தளத்துக்கு தான் வர வேண்டும். ஒரு லிஃப்ட் மட்டுமே செயல்படுவதால் இதன் வழியே ஒரே நேரத்தில் பலர் சென்று வருவது இயலாத நிலை உள்ளது. இதற்காக நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.


மேலும், மருத்துவர்கள் வந்தால் அவர்கள் வருகையைக் காரணம்காட்டி நோயாளிகள் காக்க வைக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, பொதுமக்களும், நோயாளிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

பழுதாகி இருக்கும் மற்றொரு லிஃப்ட்டை உடனடியாக சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், ஓரளவு நோயாளிகளின் சிரமத்தை குறைக்க இயலும். ஆகவே உடனடியாக மற்றொரு லிஃப்ட்டை பழுது நீக்கிட வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.