போடி: தமிழக - கேரள எல்லையில் தேனி மாவட்டம் அமைந்துள்ளது. இங்கிருந்து கேரளா செல்ல குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய 3 வழித்தடங்கள் உள்ளன. இவை அனைத்தும் மலைச்சாலைகள் ஆகும். இதில் குமுளி வழி, போடிமெட்டு வழி பிரதான பாதைகளாக உள்ளன.
போடிமெட்டு பாதையை பொருத் தளவில் பூப்பாறை, மூணாறு, அடிமாலி, கொச்சின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்கிறது. இச்சாலையில் அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக, மூணாறு புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் என்பதால், சுற்றுலா பயணிகள் அதிகளவில் பயன் படுத்துகின்றனர்.
இச்சாலை 17 கொண்டைஊசி வளைவு களுடன் சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மலையடிவாரமான முந்தலில் இருந்து 20 கி.மீ. தொலைவுக்கு இந்த மலைப் பாதை உள்ளது. மூடுபனியும், பள்ளத்தாக்கும் நிறைந்த இப்பகுதியில் பலரும் தங்களது வாகனங்களை நிறுத்தி இயற்கையை ரசிக்கின்றனர். சிலர் அங்குள்ள குரங்குகளுக்கு இட்லி, புளியோ தரை, மிக்சர், காராபூந்தி உள்ளிட்டவற்றை கொடுக்கின்றனர்.
இந்த ருசியால் கவரப்பட்ட குரங்கு கூட்டம், தற்போது உணவுக்காக மலைச் சாலையிலேயே பகல் முழுவதும் காத்திருக் கின்றன. இவற்றை ரசித்து, புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள், அதற்கு உதவி செய்வதாக நினைத்து பல்வேறு உணவுகளை வழங்குகின்றனர். ‘வாங்கியே பழக்கப் பட்டுள்ளதால்’ எந்த வாகனம் நின்றாலும், உணவுக்காக தாவிச் சென்று அவர்கள் முன் எதிர்பார்ப்புடன் குரங்குகள் நிற்கின்றன.
குழந்தைகள் கையில் வைத்திருப்பதை பறிப்பதுடன், வாகனங்களுக்குள் ஏறி அங்குள்ள பைகளையும் எடுத்துச்சென்று விடுகின்றன. சமூகவலைதளத்தில் பதிவிடு வதற்காக சிலர் ஐஸ்கிரீம், குளிர்பானம், மது போன்றவற்றையும் கொடுக்கின்றனர். இதனால் மலைச்சாலையின் வழி நெடுகிலும் குரங்குகளின் எண்ணிக்கை அதி கரித்துள்ளது.
குமுளி பாதையை பொருத்தளவில், பீர்மேடு, வண்டிப்பெரியாறு, கோட்டயம், சபரிமலை செல்பவர்கள் அதிகளவில் பயன் படுத்துகின்றனர். இங்கும் இதே நிலை உள்ளது. வாகனங்களில் செல்லும்போதே பலரும் உணவுகளை சாலை யோரம் வீசிச் செல் கின்றனர்.
இவற்றை எடுப்பதற்காக வரும் குரங்குகள் ஒன்றுக் கொன்று சண்டையிட்டுக் கொள்கின்றன. சாலையில் கிடக்கும் உணவை எடுக்க வரும் குரங்குகள் வேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டும் இறக்கின்றன. இருப்பினும், குரங்குகளுக்கு உணவிடும் பழக்கத்தை பலரும் மாற்றிக் கொள்ள வில்லை. இதனால் கம்பம்மெட்டு உள்ளிட்ட 3 மலைச்சாலைகளில் வழிநெடுகிலும் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘குரங்குகளின் செரிமான உறுப்புகளின் தன்மை வேறு. ஆனால், பொறித்த, வறுத்த மற்றும் துரித உணவுகளை அளிப்பதால், அவை பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றன.
மேலும், தனக்கான இரையை வனத்துக்குள் தேடிச்சென்று உண்ணும் பழக்கத்தையும் அவை இழந்து வருகின்றன. எனவே, எந்த விலங்குகளுக்கும் உணவு வழங்கக்கூடாது என்ற எச்சரிக்கை அறிவிப்புகள் வழி நெடுகிலும் வைக்கப்பட்டுள்ளன’ என்றனர்.