தென்னம்பாக்கம் அய்யனார் கோயிலில் ஆர்.ஜே.பாலாஜி உருவில் அழகு பொம்மை!


கடலூர் அருகே உள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில் உள்ளது அழகுமுத்து அய்யனார் கோயில். வேண்டிய வரங்களை அருளும் அழகுமுத்து அய்யனாரை திங்கள்கிழமைகளில் வழிபடுவது சிறப்பாகும். கம்பீரமான கலைநயமிக்க கோபுரங்களுக்கு மாறாக இந்தக் கோயிலில் பல வண்ணங்களால் ஆன ஆயிரக்கணக்கான பொம்மைகள் பக்தர்களைக் கைகூப்பியபடி வரவேற்பது தனிச்சிறப்பு.

கோயிலுக்குள் நுழைந்தவுடன் பெரிய அளவில் யானை, குதிரை உருவங்கள் உள்ளன. இதைக் கடந்து உள்ளே சென்றால் மூலவர் பூரணி அம்மாள், புஷ்கலை அம்பாள் சமேத அழகுமுத்து அய்யனார் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். மேலும், அய்யனாரின் வலப்புறம் வீரபத்திரர் காட்சி அளிக்கிறார்.

இந்த கோயிலில் வீற்றிருக்கும் அய்யனாருக்கு பொம்மைகளை வடித்து எடுத்து வந்து வைத்து, நேர்த்திக் கடன் செய்வது மரபாக இருந்து வருகிறது. தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும், அந்த வேண்டுதலுக்கு ஏற்ப பக்தர்கள் பொம்மைகளைச் செய்து கோயிலில் வளாகத்தில் வைத்து வழிபட்டுச் செல்கிறார்கள். இங்குள்ள பொம்மை உருவங்களே இங்கு வரும் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறியதற்கு சான்றாகக் காட்சி தந்து கொண்டிருக்கின்றன.

தங்கள் குழந்தைகள் என்னவாக வர வேண்டும் என்று வேண்டுகிறார்களோ அந்த உருவத்தை சிமென்டால் பொம்மையாகச் செய்து வர்ணம் பூசி அங்கு வைப்பது மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காவலர்கள், நீதிபதிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என ஒவ்வொருவரும் தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பிறகு தங்களது உருவத்திலேயே அங்கு இவ்வாறு வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி உருவில் வைக்கப்பட்டுள்ள
நேர்த்திக் கடன் பொம்மை.

இப்படியே இந்தக் கோயிலைச் சுற்றிலும் எங்கு பார்த்தாலும் நேர்த்திக் கடன் பொம்மைகள் அணிவகுத்து நிற்கின்றன. தற்போது அதில் உள்ள ஒரு உருவ பொம்மை சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. திரைப்பட இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் சிலைதான் அது. அவர் இயக்குநராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய நிலையில், தனது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக இங்கு தனக்காக ஒரு பொம்மையை வைத்துள்ளார்.

அவர் வைத்து விட்டுச் சென்று சில ஆண்டுகள் ஆனாலும், தற்போது வலைதளங்களில் பரவி வருவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. குழந்தை வரம் கேட்பவர்கள் 27 நாட்கள் விரதம் இருந்து, மூன்று முறை வலம் வந்து இங்குள்ள சித்தர் ஒருவரை வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி வேண்டுதல் நிறைவேற இவர்கள் குழந்தை பொம்மை செய்து கோயில் முன்பாக வைக்கிறார்கள்.

இதேபோல் கை, கால்களில் பிரச்சினைகள் உள்ளவர்கள் இங்கு வந்து வேண்டி அது குணமான பிறகு கை அல்லது கால் உருவங்களை செய்து வைக்கின்றனர். திருமணத்துக்காக வேண்டிக் கொள்பவர்கள் அது நிறைவேறியதும், மணமக்கள் போல பொம்மையை செய்து வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பல்வேறு கோயில்களுக்குச் சென்று பற்பல வழிபாடுகளில் ஈடுபட்டிருக்கலாம். ஒருமுறை தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார்கோயிலுக்குச் சென்று வாருங்கள். ஒரு வித்தியாசமான நல் உணர்வை அனுபவித்து விட்டு வரலாம்.

x