ஆபத்தை உணராமல் ஆற்றோரம் வசிக்கும் பழங்குடியின மக்கள் @ செங்கல்பட்டு


பாலாற்றின் முகத்துவாரம் அருகே கரையில் குடிசைகள் அமைத்து தங்கியுள்ள இருளர் பழங்குடியினர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட காரைத்திட்டு மற்றும்ஐந்துகாணி ஆகிய பகுதிகளில், ஏராளமானஇருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம்சார்பில் பழங்குடியினர் நலத்திட்ட குடியிருப்புகள் அப்பகுதியில் அமைத்து தரப்பட்டன.

பழங்குடியின மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளில் பாதுகாப்பாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஐந்துகாணி பகுதியில் உள்ள பாலாற்றின் முகத்துவாரத்தின் மிகஅருகே கரையோரத்தில் உள்ள பனைமரங்களின் நடுவே, 40-க்கும் மேற்பட்ட குடிசைவீடுகள் அமைத்து இருளர் மக்கள் குடியேறிஉள்ளனர். மேலும், சிலர் குடிசைகள் அமைத்து வருகின்றனர்.

இவர்கள், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்து இங்கு வந்துள்ளனர். மேலும், நிரந்தரமாக இங்கு தங்கும் வகையில் பிள்ளைகளை அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர். இவர்களது குடிசைகள் அமைக்கப்பட்டுள்ள பகுதி பாலாற்றில் அதிகளவில் நீரோட்டம் ஏற்படும்போது வெள்ளத்தில் மூழ்கும்பகுதியாகும்.

அப்பகுதியில் பழங்குடியின மக்கள் குடியேறி வருவது அசம்பாவிதங்கள் ஏற்பட வழி வகுக்கும் என்பதால், அவர்களை பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்த பழங்குடியினர் நலத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முருகன்

இதுகுறித்து, அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினத்தை சேர்ந்த முருகன் கூறியதாவது: நாங்கள் ஏற்கெனவே இப்பகுதியில்வசித்து வந்தோம். ஆனால், பிழைப்புக்காக பல்வேறு இடங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. தற்போது, மீண்டும் ஆற்றின் கரையோரத்தில் பனைமரங்களின் நடுவே சிறியளவில் குடிசைகள் அமைத்து தங்கியுள்ளோம்.

எங்களின் பிள்ளைகளின் நலன் கருதி இப்பகுதியிலேயே தங்க முடிவு செய்துள்ளோம். பிள்ளைகளையும் இப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில்சேர்த்துள்ளோம். சிலர், இங்கே தங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நம் நிலைதான் இவ்வாறுஉள்ளது.

நமது பிள்ளைகளாவது கல்வியறிவு பெற வேண்டும் என்பதற்காக, பள்ளியில் சேர்த்துள்ளோம். இங்கிருந்து வெளியேற்றினால், பிள்ளைகளின் கல்விபாதிக்கப்படும் என்பதால் பாதுகாப்பான இடத்தில் நிலம் வழங்கினால் அப்பகுதியில் வசிக்கவும் நாங்கள் தயராக உள்ளோம் என்றார்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கோவிந்தசாமி கூறியதாவது: இப்பகுதியில் ஏற்கெனவே பழங்குடியின மக்கள் வசித்து வருவதால், ஒரே இடத்தில் அனைவரும் தங்கும் வகையில் மேற்கண்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பழங்குடியினர் ஆற்றின் கரையோரம் இரவோடு, இரவாக குடிசைகள் அமைத்து குடியேறியுள்ளனர்.

மேலும், குடிநீருக்காக இன்னல்களை சந்தித்ததால் குடிநீர் குழாய் ஒன்று அமைத்து தரப்பட்டுள்ளது. இதன்மூலம், குடிநீர் பெற்று வருகின்றனர். எனினும், சாலை மற்றும் மின் இணைப்புபோன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. மேலும், ஆற்றின் கரையில் வசிப்பதால் நீரோட்டம் அதிகரிக்கும்போது குடிசைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லும் அபாயம் உள்ளது.

கோவிந்தசாமி

கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் வசித்து வரும் கர்ப்பிணிக்கு வலி ஏற்பட்டது. ஆனால், ஆம்புலன்ஸ் வாகனம்அப்பகுதிக்கு செல்ல சாலையில்லாததால் உள்ளூர் மக்கள் இணைந்து அவரை தூக்கி வந்துவாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம்.

இதுதவிர, பிள்ளைகளுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு இல்லாதாதல் நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை உள்ளது. மழை பெய்ய தொடங்கியுள்ளதால், பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துதடுப்பணை நிரம்பியுள்ளது. தொடர்ந்து மழை நீடித்தால் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் நிலைஉள்ளது. அதனால், அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு பழங்குடியின மக்களை பாதுகாப்பான இடத்தில்தங்கவைக்கவும், இப்பகுதியிலேயே குடியிருப்பு அமைத்து தரவும் மாவட்ட நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

x