திருவாரூர்: திருவாரூர் அருகே விவசாய நிலத்தில், 230 கிலோ வாட் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
காரைக்குடியிலிருந்து திருவாரூர் வழியாக, நெய்வேலிக்கு செல்லக்கூடிய 230 கிலோ வாட் திறன் கொண்ட உயர் மின்னழுத்த கம்பி கிடாரங்கொண்டான் என்கிற இடத்தில் விவசாய நிலத்தில் அறுந்து விழுந்துள்ளது.
இதனை இன்று (வியாழக்கிழமை) காலை வயலுக்குச் சென்ற விவசாயிகள் பார்த்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மின்வாரிய அதிகாரிகள் வருவதற்கு தாமதமாகி வருவதால் அப்பகுதியில் பொதுமக்களும் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும், அச்சமடைந்துள்ளனர்.
இதனால் தங்களது கால்நடைகளை மேச்சலுக்கு அனுப்பாமல் வீடுகளிலேயே கட்டி வைத்துள்ளனர். மேலும் அருந்து கிடக்கும் கம்பியின் அருகே நின்று யாரும் மின்சார கம்பியை மதித்து விடாதபடி பாதுகாத்து வருகின்றனர்.
உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் நேரடியாக சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து மின் இணைப்பை துண்டிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே மின்சார கம்பிகளை இழுத்துக் கட்டி பராமரிப்பு பணிகளை முறையாக செய்ய வேண்டும் என்றும் அப்படி பராமரிப்பு பணிகள் நடக்காததன் காரணமாகவே இன்று மின்கம்பி அறுந்து கிடப்பதாகவும் பொதுமக்கள் மின்வாரியத்தின் மீது குற்றம்சாட்டுகின்றனர்.