மதுரை: மதுரை விளாங்குடியில் அப்பட்டமாக மோட்டார் தண்ணீர் போல் கழிவுநீர் வைகை ஆற்றில் கலக்கிறது. ஆட்சி மாறினாலும், மாறாத பீறிட்டு கலக்கும் கழிவு நீரால் வைகை ஆறு தூங்கா நகரின் துயரமாக மாறியுள்ளது.
மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்து மதுரை நகரின் சிறப்பாக வைகை ஆறு திகழ்கிறது. இந்த ஆறு தேனி மாவட்டம் வருஷநாடு மலைப் பகுதியில் உற்பத்தியாகி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை வழியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் சென்று கலக்கிறது. சங்கத் தமிழ் இலக்கியங்களில் அதிகம் பாடப்பட்ட வைகை ஆறு, தற்போது அதன் பாரம்பரியத்தையும், பொலிவையும் இழந்து, மதுரை மாநகராட்சியின் அனைத்து விதமான கழிவுகளை சுமந்து செல்லும் கழிவு நீரோடையாக மாறிவிட்டது.
மழைக்காலங்களிலும், வைகை அணையில் தண்ணீர் திறக்கும் போது மட்டுமே சுத்தமான தண்ணீர் ரோட்டத்தை பார்க்க முடிகிறது. வைகை ஆற்றை சீரமைப்பதாகவும், அழகுப் படுத்துவதாகவும் கூறி ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், ஆற்றின் இரு கரைகளிலும் காம்பவுண்ட் சுவரும், சாலையும் அமைக்கப்பட்டதே தவிர ஆற்றை பழைய நிலைக்கு மீட்க முடியவில்லை. மாநகராட்சி கோரிப்பாளையம், விளாங்குடி போன்ற பல இடங்களில் கழிவு நீரேற்று நிலையம் அமைத்து கழிவுநீரை வைகை ஆற்றில் கலக்கவிடாமல் இருக்க சுத்திரிக்க ஏற்பாடு செய்தது.
ஆனாலும், இந்த திட்டம் வெற்றிப் பெறாததால், ஆட்சி மாறினாலும், மாறாத காட்சியால் வைகை ஆறு, மதுரை நகரின் துயரமாக மாறிக் கொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் மதுரை வைகை ஆற்றில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கலந்தது. தற்போது அதன் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், கழிவு நீர் கலப்பதை மாநகராட்சியால் முற்றிலும் நிறுத்த முடியவில்லை.
நேற்று வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் மற்றும் அந்த அமைப்பினர், விளாங்குடி முதல் வண்டியூர் வரை, வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை ஆய்வு செய்தனர். அதில், 22 இடங்களில் மாநகராட்சிப் பகுதி கழிவுநீர் வைகை ஆற்றில் கலப்பது தெரியவந்தது. விளாங்குடியில் உள்ள பம்பிங் ஸ்டேனில் இருந்தும், அருகில் குழாய் மூலமும், அப்பட்டமாக கழிவுநீர் வைகை ஆற்றில் பம்பு செட் மோட்டார் போல் கழிவுநீர் பீறிட்டு கலக்கிறது.
இது குறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறுகையில்,"மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி விளாங்குடி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறை இல்லை. அதனால், ஒவ்வொரு தெருப் பகுதியிலும் சேகரமாகும் கழிவுநீர், பைப் போட்டு வைகை ஆற்றில் கலக்கவிடப்படுகிறது. மேலும், வைகை ஆற்றின் ஓட்டி பம்பிங் ஸ்டேஷனில் இருந்து நேரடியாக கழிவு நீர் குழாய் மூலம் கலக்கவிடப்படுகிறது.
முன்பு கழிவு நீர் நேரடியாக விடப்பட்டது. தற்போது குழாய் அமைத்து, அதன் மீது மண் போட்டு மூடப்பட்டு கழவுநீர் விடப்படுகிறது. ஆற்றின் வெளியே இருந்தால் இந்த கழிவு நீர் கலப்பது தெரியாது. ஆற்றின் நீரோட்டப்பாதைகளில் நடந்து சென்றால் மட்டுமே கலக்கிறது. காலையில் பீக் அவரில் அதிகளவு கழிவு நீர் கலக்கிறது" என்று ராஜன் கூறினார்.