வெற்றி நிச்சயம், வெண்ணிலா சத்தியம்! - இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி வைரமுத்து கவிதை!


நிலவில் ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டு, நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 100 கிலோ மீட்டர் துவருப்பகுதியை வெற்றிகரமாக சுற்றி வந்துள்ளது. சந்திரயானின் லேண்டரும், ரோவரும் ஆகஸ்டு 23ம் தேதி நிலவின் தெற்கு துருவப்பகுதியில் தரையிறங்க உள்ளது. இந்த ரோவரின் பின்பக்கம் இந்திய அசோக சக்கரமும், இஸ்ரோவின் சின்னமும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் தடம் முதல் முறையாக நிலவில் பதிக்கப்பட உள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து 14ம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு சந்திரயான் எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. வெற்றிகரமாக சுற்று வட்டப்பாதையில் செலுத்தப்பட்ட விண்கலம், 41 நாட்கள் பயணம் செய்து, வரும் ஆகஸ்டு 23ம் தேதி தனது இலக்கில் தரையிறங்க உள்ளது. இஸ்ரோவின் இந்த சாதனை பயணத்தை பிரதமர் மோடி முதல் ஆராய்ச்சியாளர் வரை பலர் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், இஸ்ரோவின் இந்த சாதனையை வியந்து கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை இயற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

சந்திரயான் 3

விண்ணில்

நிலைநிறுத்தப்பட்டதில்

இந்திய விஞ்ஞானிகளை

அண்ணாந்து பார்க்கிறது

அகிலம்

ஆகஸ்ட் 23

அது தடுமாறாமல்

தடம் மாறாமல்

நிலாத் தரையில்

இயங்க வேண்டும்

உலகத்தின் கண்கள்

குவிய வேண்டும்

நிலாவின் மீதும்

இந்தியா மீதும்

வெற்றி நிச்சயம்

வெண்ணிலா சத்தியம்

என வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார். இந்த கவிதை தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

x