விவசாயிகளின் வேதனையைத் தீர்க்குமா வேளாண் பட்ஜெட்?... இன்று தாக்கல் செய்யப்படுகிறது!


முதல்வருடன் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம்

தமிழகத்தில் மூன்றாவது ஆண்டாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த பட்ஜெட்டிலாவது தங்களின் வேதனை தீர்க்கப்படுமா என்று விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

விவசாயி

திமுக அரசின் மூன்றாவது வேளாண் பட்ஜெட் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதில் விவசாயிகளைக் கவரும் வகையில், பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிக பிரிவுக்கான திட்டங்கள் மட்டுமின்றி, கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, மின்சாரம் உள்ளிட்ட விவசாயிகள் தொடர்புடைய துறைகளுக்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்றம்

இந்நிலையில், 2024 - 25-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, மூன்றாவது முறையாக அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்யவுள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்குவதால், விவசாயிகளைக் கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தொடர்பாக விவசாயிகளிடம் சமீபத்தில் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, மூத்த விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கவேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். தமிழக முதல்வர் ஸ்டாலினும் இதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளை ஏமாற்றி வருகின்றன. இந்த ஆண்டு குறுவை மற்றும் சம்பா பயிர்கள் போதிய நீரின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு நிவாரணம் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று விவசாயிகளுக்கு பல கோரிக்கைகள் உள்ளன. அவை இந்த பட்ஜெட்டில் நிறைவேறுமா விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

x