‘வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றாலும், மகப்பேறு விடுப்பு உண்டு’ உயர் நீதிமன்றம் உத்தரவு!


தாய் - சேய்

‘வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் தாய்மார்களுக்கும் மகப்பேறு விடுப்பு உண்டு’ என வழக்கு ஒன்றின் தீர்ப்பாக, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பேறுகால விடுப்பாக மகளிருக்கு வழங்கப்படும் விடுப்பு, குழந்தை மற்றும் தாய் என இருவருக்குமான ஆதாயங்களை உள்ளடக்கி இருக்கும். பிரசவகால மருத்துவ போராட்டத்திலிருந்து தாய் தன்னை தேற்றிக்கொள்ளவும், பிறந்த சிசுவை பேணிப் பாதுகாக்கவும் இந்த மகப்பேறு விடுப்பு, பணிக்கு செல்லும் மகளிருக்கான சட்டபூர்வ உரிமையாக மாறி உள்ளது.

நீதிமன்ற உத்தரவு

ஆனபோதும் சில வினோத வழக்குகளில் இந்த மகப்பேறு விடுப்பு மறுக்கப்படும்போது, பாதிக்கப்பட்டவர்கள் நீதிகேட்டு நீதிமன்றப் படிகளில் ஏறுவதும் நடக்கும். அவ்வாறு ராஜஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர், வாடகைத்தாய் மூலம் தான் பெற்ற இரட்டைக் குழந்தைகளை பராமரிப்பதற்காக மருத்துவ விடுப்பு கோரினார். மாநில அரசால் அது மறுக்கப்படவே, நீதிமன்ற உதவியை அப்பெண் நாடினார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், /வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றாலும், தாய்க்கான மகப்பேறு விடுப்பினை மறுக்கக்கூடாது’ என தீர்ப்பு வழங்கி உள்ளது. ”வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதற்காக, குழந்தையை பேணி வளர்க்கும் பொறுப்பை இன்னொரு நபரிடம் அளிக்க முடியாது” எனவும் தனது தீர்ப்பில் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

தாய் - சேய்

மேலும், “அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-ன் கீழ் சொல்லப்படும் வாழும் உரிமை என்பது, தாய்மைக்கான உரிமை மற்றும் ஒவ்வொரு குழந்தையின் முழு வளர்ச்சிக்கான உரிமை ஆகியவற்றை உள்ளடக்கியது. தத்தெடுக்கும் தாய்க்கு அரசு மகப்பேறு விடுப்பு வழங்கும்போது, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற தாய்க்கு விடுப்பு வழங்க மறுப்பது முறையற்றது” என்ற நீதிமன்றம், ”இயற்கையான உயிரியல் தாய்க்கும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்க்கும் இடையே வித்தியாசம் காட்டுவது தாய்மையை அவமதிப்பதாகும்” என்றும் தீர்ப்பில் கூறியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x