தொடர்மழையால் உதகை ரோஜா பூங்கா நாசம்: அழுகிய மலர்களை அகற்றும் பணி தீவிரம்!


உதகை ரோஜா பூங்காவில் தொடர் மழையால் அழுகிய ரோஜாக்கள்

தொடர் மழை காரணமாக உதகை ரோஜா பூங்காவில் மலர்கள் அழுகி வருவதால் அதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், உதகையில் உள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்ல ஏரி, பைக்காரா நீர்வீழ்ச்சி, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், கூடலூர் முதுமலை புலிகள் காப்பகம், உள்ளிட்ட இடங்களுக்கு சென்று குளுமையான காலச்சூழலை ரசிக்கின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தோட்டக்கலைத்துறை சார்பில் ரோஜா பூங்கா உருவாக்கப்பட்டது.

அழுகிய மலர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்

இப்பூங்காவில், 4 ஆயிரம் வகை ரோஜாச் செடிகளும் 40 ஆயிரம் ரோஜாச் செடிகளும் உள்ளன. இங்கு, வனப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் ரோஜாச் செடிகள் மற்றும் நாட்டு வகை ரோஜா மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. உதகைக்குச் சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த ரோஜா பூங்காவை கண்டு ரசிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உதகை ரோஜா பூங்காவில் தொடர் மழையால் அழுகிய ரோஜாக்கள்

வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருப்பதால் நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ரோஜா பூங்காவில் நடப்பட்டுள்ள செடிகளில் உள்ள ரோஜா மலர்கள் அழுகி உதிர்ந்து வருகின்றன. இதையடுத்து, இந்த அழுகிய மலர்களை அகற்றும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழை குறைந்திருந்த போது ரோஜாக்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்த நிலையில், தற்போது மிகச் சில செடிகளில் மட்டுமே ரோஜாக்கள் பூத்து உள்ளதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

x