என்ன செய்தாலும் கர்நாடகாவால் மேகேதாட்டு அணையை கட்ட முடியாது - அமைச்சர் துரைமுருகன் உறுதி!


அமைச்சர் துரைமுருகன்

மேகேதாட்டு பற்றி கர்நாடகா அரசு பேசிக் கொண்டிருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. தமிழ்நாடு அனுமதியின்றி எந்தக் காலத்திலும் மேகேதாட்டு அணையை கர்நாடகாவால் கட்ட முடியாது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியாக கூறியுள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது.

சித்தராமையா

இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தின் சட்டசபையில் முதல்வர் சித்தராமையா 2024-2025ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். அப்போது "தேவையான அனுமதிகளை பெற்று விரைவில் மேகேதாட்டு அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இதற்கான ஒரு தனி மண்டல குழுவும், இரண்டு துணை மண்டல குழுவும் என 3 குழுக்கள் அமைக்கப்படவுள்ளன" என்று கூறினார். சித்தராமையாவின் இந்த அறிவிப்புக்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் துரைமுருகன்

இந்த சூழலில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி கர்நாடகா அரசால் மேகேதாட்டு அணையை கட்ட முடியாது. கர்நாடகா நிதியை ஒதுக்கலாம், குழுவை அமைக்கலாம். ஆனால், தமிழ்நாடு அனுமதியின்றி அணை கட்ட முடியாது. மேகேதாட்டு பற்றி கர்நாடகா அரசு பேசிக் கொண்டிருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எந்தக் காலத்திலும் மேகேதாட்டு அணையை கர்நாடகா கட்ட முடியாது. அதுதான் சட்டம் அதுதான் நியதி" என்று திட்டவட்டமாக கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

டெல்லியில் அதிர்ச்சி... நேரு ஸ்டேடியம் அருகே இடிந்து விழுந்த கட்டுமானம்; 12 பேரின் கதி என்ன?

x