29 கின்னஸ் சாதனை படைத்த `டேக்வாண்டோ’ நாராயணன்


கின்னஸ் சான்றுகளுடன் நாராயணன்

மதுரையை சேர்ந்த நாராயணன் என்ற டேக்வாண்டோ தற்காப்பு கலை பயிற்சியாளர், தற்காப்பு கலையில் 29 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தி தனி சாதனை படைத்துள்ளார்.

நாராயணனும் மற்றவர்களைப் போலவே கல்லூரி படிப்பு, ஐடி கம்பெனியில் வேலை என்று இருந்தவர் தான். மன அழுத்தத்திலிருந்து விடுபட டேக்வாண்டோ தற்காப்பு கலையை கற்றுக் கொண்ட இவர், ஒரு கட்டத்தில் அதையே மற்றவர்களுக்கு பயிற்றுவிக்கும் பயிற்சியாளராக மாறினார். சென்னையில் பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டு மதுரை திரும்பி மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் வேலையை ஆரம்பித்தார்.

அதன்மூலம் இதுவரையில் மதுரையில் 1,000க்கும் மேற்பட்ட ‘டேக்வாண்டோ’ வீரர்களை உருவாக்கி உள்ளார். இவரிடம் கற்றுக் கொண்டவர்களில் பலரும் பயிற்சியாளர்களாக மாறி இந்த கலையை கற்றுக் கொடுத்து வருகின்றனர். மற்றவர்களை உருவாக்குவதை போலவே தன்னையும் இந்த கலையில் நிகரில்லாதவராக மாற்றிக் கொண்டிருக்கிறார் நாராயணன்.

ஒரு நிமிடத்தில் அதிக பஞ்ச், 3 நிமிடத்தில் அதிக பஞ்ச், ஒரு நிமிடத்தில் 38 காங்கிரீட் செங்கலை உடைப்பது, ஜம்பிங் பேக் ஹிக் முறையில் காங்கிரீட் செங்கலை உடைப்பது, கீழும் மேலுமாக ஆணி படுக்கையில் படுத்துக் கொண்டு மேலே ஒரு நிமிடத்தில் 32 காங்கிரீட் சுத்தியலை உடைப்பது, ஒரு நிமிடத்தில் 4 கிலோவுக்கு மேலான 23 தர்பூசணி பழங்களை உடைத்தது உள்ளிட்ட 29 பிரிவுகளில் கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா இவரை இதற்காக நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்

"இரவு பணி பார்க்கும் ஐடி பணியாளர்களுக்கு டேக்வாண்டே போன்ற தற்காப்பு கலையின் அவசியம் புரிய ஆரம்பித்திருக்கிறது. அதனால், கல்லூரி மாணவர்களைத் தாண்டி தற்போது ஐடி நிறுவன பணியாளர்களும் என்னுடைய மாணவர்களாக உள்ளனர்’’ என்கிறார் நாராயணன்.

x