மதுரை: விவசாயத்தில் நன்மை செய்யும் பூச்சிகளை தெரிந்து கொள்ளவும், தீமை செய்யும் பூச்சிகளை தெரிந்து ‘கொல்லும்’ தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு கற்றுத்தந்து உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் ‘ஒரு கிராமம், ஒரு பயிர்’ திட்டத்தில் செயல் விளக்கத்திடல் அமைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி மதுரை மாவட்டத்தில் 250 வருவாய் கிராமங்களில் செயல்விளக்கத்திடல் அமைக்கப்பட்டுள்ளது. வேளாண்மை உழவர் நலத்துறை மானியக் கோரிக்கையில் ‘ஒரு கிராமம் ஒரு பயிர்’ எனும் புதிய திட்டம் மூலம் விவசாயிகளுக்கு தொழில் நுட்பங்களை கற்றுத்தரும் வகையில் தமிழகத்தில் 15 ஆயிரத்து 280 வருவாய் கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி மதுரை மாவட்டத்தில் 490 வருவாய் கிராமங்களில் ‘ஒரு கிராமம், ஒரு பயிர்’ திட்டம் தற்போது செயல்படுத்தப் படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள், நன்மை செய்யும் பூச்சிகளை தெரிந்து கொள்ளவும், தீமை செய்யும் பூச்சிகளை தெரிந்து ‘கொல்லும்’ வகையிலும் நிரந்தரப் பூச்சி கண்காணிப்பு திடல்கள், வயல்களில் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பயிர் என்ற விதத்தில் 5 முதல் 10 ஏக்கர் பரப்பளவில் செயல் விளக்கத் திடல் அமைக்கப்படுகின்றன.
இதில் நெல், சோளம், கம்பு, குதிரை வாலி, சாமை, தினை, கேழ்வரகு, வரகு, மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயறு, கொள்ளு, தட்டைப் பயறு, நரிப் பயறு, மொச்சை, நிலக் கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு, பருத்தி, கரும்பு போன்ற பயிர்களுக்கு செயல் விளக்கத்திடல் அமைக்கப்படுகின்றன.
இதில் நிலம் தயாரிப்பு, விதை நேர்த்தி, விதைப்பு முறை, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம், மண் பரிசோதனை அடிப்படையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து, களை, நீர் மேலாண்மை ஆகிய அனைத்து தொழில் நுட்பங்களும் விவசாயிகளுக்கு விளக்கப்படுகின்றன. இப்படி விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து தொழில் நுட்பங்களையும் விவசாயிகளுக்கு கற்றுத்தரவும், தெரிந்து கொள்ளவும் செயல் விளக்கத் திடல் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் குறைந்தபட்சம் 15 முதல் 20 சதவீதம் கூடுதல் உற்பத்தி பெறவும் வழிவகுக்கப்படுகின்றன.
இது குறித்து வேளாண்மை அதிகாரி கூறுகையில், "தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தபடி மதுரை மாவட்டத்தில் ‘ஒரு கிராமம் ஒரு பயிர்’ திட்டம் முன் மாதிரியாக செயல்படுத்தப்படுகிறது. விவசாயத்துக்கு நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் பற்றி தெரிந்துகொள்ள மாவட்டத்திலுள்ள 490 வருவாய் கிராமங்களில் 250 கிராமங்களில் செயல் விளக்கத்திடல் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு விவசாயிகளுக்கு விதைப்பு முதல் அறுவடை வரையிலான அனைத்து தொழில் நுட்பங்களையும் வேளாண்மை அலுவலர்கள் மூலம் கற்றுத் தருகிறோம். ஒரு கிராமத்தில் 5 முதல் 10 ஏக்கர் வரையில் செயல் விளக்கத் திடல் அமைக்கப் பட்டுள்ளன. தினமும் செயல் விளக்கத்திடல் கண்காணிக்கப்பட்டு பதிவேடுகளில் பதிவு செய்யப்படுகின்றன. இதன் மூலம் விளைச்சல் அதிகரிப்பதை விவசாயிகள் நேரடியாக காணலாம்" என்று வேளாண்மை அதிகாரி கூறினார்.