விலை வீழ்ச்சியால் வீதியில் கொட்டப்பட்ட பூக்கள்: வியாபாரிகள் வேதனை!


சாலையில் கொட்டப்படும் பூக்கள்

பண்டிகைக் காலங்களில் விண்ணை முட்டும் அளவிற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்பட்ட பூக்கள் தற்போது விலை வீழ்ச்சியால் வீணாக சாலையில் கொட்டப்படுவதால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சாலையில் கொட்டப்பட்டுள்ள பூக்கள்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செண்டுமல்லி, வாடமல்லி, கோழிக்கொண்டை, செவ்வந்தி, சம்பங்கி, கனகாம்பரம், மல்லிகை உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் பூக்கள் விற்பனைக்காக பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. இதனை தமிழகத்தின் பிறப்பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வாங்கி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

தற்போது கார்த்திகை மாத விழாக்கால பண்டிகைகளை முன்னிட்டு குறுகிய காலபயிரான செண்டுமல்லி, செவ்வந்தி பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு வழக்கத்தை விட செண்டுமல்லி, செவ்வந்தி பூக்களின் வரத்து அதிகரித்து அதன் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் விவசாயிகள் போதிய விலை கிடைக்காததால் செண்டுமல்லி, செவ்வந்தி பூக்களை மார்கெட்டின் பின்புறம் கொட்டிச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் பூக்கள் குப்பை போல் குவிந்து கிடக்கிறது. விழாக்காலங்களில் விண்ணை முட்டும் அளவிற்கு விற்பதும் விலை வீழ்ச்சி அடைந்தால் பூக்களைச் சாலையில் கொட்டும் நிலை ஏற்படுவதால் அரசாங்கம் மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x