விரைவில் மேகேதாட்டுவில் அணை... கர்நாடக பட்ஜெட் உரையில் சித்தராமையா உறுதி!


சித்தராமையா

மேகேதாட்டுவில் விரைவில் அணை கட்டுவது உறுதி என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கர்நாடக சட்டமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் விவசாயிகள் போராட்டம்

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர், இம்மாதம் 12ம் தேதி தொடங்கியது. நிதித்துறையை நிர்வகிக்கும் முதல்வர் சித்தராமையா, 2024 - 25ம் நிதி ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது மேகதாது அணை கட்டுவது தொடர்பான அறிவிப்பையும் சித்தராமையா வெளியிட்டார்.

இதுகுறித்து பேசிய அவர், ''மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இதற்காக ஒரு தனி மண்டல குழுவும், இரண்டு துணை மண்டல குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு தேவையான அனுமதிகளை பெற்று காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும். அதன்மூலம் பெங்களூரு குடிநீர் பிரச்சினையை தீர்ப்போம். மேகதாது பகுதியில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு மற்ற பகுதிகளில் நிலங்கள் ஒதுக்கப்படும். அங்குள்ள மரங்கள் வெட்டுவதற்கான சர்வே பணிகள் நடக்கிறது" என்றார்.

மேகேதாட்டு

இந்நிலையில் இந்த ஆண்டும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு வழங்காததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மேகேதாட்டில் அணை கட்டப்பட்டால் அடுத்த ஆண்டு சுத்தமாக தமிழகத்திற்கு தண்ணீர் வராத நிலை ஏற்படும். அதனால் ஒருபோக சாகுபடிக்கு வழியில்லாத நிலைக்கு தமிழகம் தள்ளப்படும்.

இதனை மிகவும் முக்கியமான விவகாரமாக தமிழக அரசியல் கட்சிகள் எடுத்துக்கொண்டு மத்திய அரசிடம் முறையிட்டு, இதில் உரிய தீர்வை காண வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மேகேதாட்டு அணை திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும், காவிரியில் நீரை பெற்றுத் தராத நதிநீர் ஆணையத்தை கண்டித்தும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

இதையும் வாசிக்கலாமே...

தேர்தல் அதிகாரியை தாக்கியதாக வழக்கு; மு.க.அழகிரி உள்ளிட்டோர் விடுதலை!

x