திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் ஊராட்சிக்குட்பட்ட கீழ முறுக்கூர் கிராமத்தில் ஸ்ரீ சப்பானி கருப்பு கோயில் வளாகத்தின் சாலையோரம் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மக்களால் அரச மரமும் வேப்ப மரமும் நடப்பட்ட நிலையில், தற்போது அவை பிரம்மாண்டமாக தழைத்து வளர்ந்துள்ளன.
வளர்ந்த மரங்களுக்கு பாரம்பரிய ஐதீகப்படி திருமணம் செய்து வைத்தால் கிராமத்தில் விவசாயம் செழிக்கும், நன்கு மழை பொழியும், கிராம மக்கள் செல்வ செழிப்புடனும், அமைதியுடனும் வாழ்வர் என்பது அந்த மக்களின் நம்பிக்கை.
இதையடுத்து அரச மரம், வேப்ப மரம் ஆகியவற்றிற்கு கிராம மக்கள் ஒருங்கிணைந்து இன்று காலை தாலி கட்டி திருமணம் செய்து வைத்தனர். இதில் கிராமத்தினர், சுற்றுப் பகுதியை சேர்ந்த ஊர் மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு பய பக்தியுடன் அரச - வேம்பு மரங்களை வழிபட்டனர்.
இதனையடுத்து இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் தலை வாழையிலை போட்டு கல்யாண விருந்து அளிக்கப்பட்டது.