இந்தியாவின் முதல் ‘ஹெலிகாப்டர் அவசர மருத்துவ சேவை’; இந்த மாநிலத்தில் இருந்து தொடங்கப்படுகிறது


ஏர் ஆம்புலன்ஸ் சேவை

இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் அவசர மருத்துவ சேவை உத்தராகண்ட் மாநிலத்தில் தனது செயல்பாட்டைத் தொடங்க உள்ளது.

சாலை மார்க்கத்திலான மருத்துவ அவசர சேவைக்கான ஆம்புலன்ஸ் வாகனங்களைப் போன்று, ஆகாய மார்க்கத்தின் மருத்துவ அவரச சேவைக்கு என ’ஏர் ஆம்புலன்ஸ்’ வசதிகளுக்காக இந்தியா நீண்ட காலமாக காத்திருக்கிறது. அதிலும், சாலை வசதிகள் இல்லாத பகுதிகள், போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுபவை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவைகள், பெரும் விபத்துகள் நேரிடுவது உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ள ஏர் ஆம்புலன்ஸ் சேவையே சிறந்தது.

ஜோதிராதித்ய சிந்தியா

தற்போதைக்கு அதிகாரபூர்வமற்ற வகையிலான ஏர் ஆம்புலன்ஸ் சேவைகள் பயன்பாட்டில் உள்ளன. ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் கட்டண அடிப்படையிலான தனியார் ஹெலிகாப்டர் சேவைகள் இதில் சேரும். ஆனால அதிகாரபூர்வ அடிப்படையிலான ஏர் ஆம்புலன்ஸ் வசதி, இனிமேல்தான் தனது முதல் சேவையை உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடங்க இருக்கிறது. இதன் பொருட்டான, அதிகாரபூர்வ தகவலை மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று தெரிவித்தார்.

“ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர் நிறுத்தப்படும். அங்கிருந்து 150 கிமீ சுற்றளவுக்கு எங்கு வேண்டுமானாலும் மக்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முடியும். ’சஞ்சீவனி' திட்டத்தின் கீழ் இந்த ஹெலிகாப்டர் அவசர மருத்துவ சேவை செயல்படும். இதற்கான ஹெலிகாப்டர் தற்போது அசெம்பிள் செய்யப்பட்டு, சான்றிதழ் பெறும் பணியில் உள்ளது. உத்தராகண்டில் டேராடூன், பந்த் நகர், பித்தோராகர் உள்ளிட்ட மூன்று விமான நிலையங்களை அரசாங்கம் மேம்படுத்துகிறது. அதே போன்று ஹெலிபோர்ட்களின் எண்ணிக்கை 21 என்பதாக உயர்த்தப்படும்.” என்று அமைச்சர் சிந்தியா தெரிவித்துள்ளார்.

ஏர் ஆம்புலன்ஸ் சேவை

கடந்தாண்டு டிசம்பரில், உத்தராகண்ட் அமைச்சரவை ’உத்தராகண்ட் ஹெலிபேட் மற்றும் ஹெலிபோர்ட் பாலிசி 2023’க்கு ஒப்புதல் அளித்தது, மாநிலத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள தொலைதூர பகுதிகளை அணுகுவதில் உள்ள சவால்களை எதிர்கொள்வது, குறிப்பாக அவசர மருத்துவ மற்றும் பேரிடர் தொடர்பான சேவைகளுக்கு உதவுவது ஆகியவை இந்த ஹெலிகாப்டர் சேவையின் முக்கிய நோக்கமாக அமையும்.

இதையும் வாசிக்கலாமே...

x