’நாவில் ருசிக்கும் தேநீர்; காலில் கடிக்கும் மீன்’ தாய்லாந்தின் விசித்திர உணவகம் இணையத்தில் வைரல்


தாய்லாந்தின் விசித்திர உணவகம்

வண்ண மீன்கள் வட்டமிடும் தாய்லாந்து உணவகம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக விளங்குவது தாய்லாந்து தேசம். அங்கே செயல்படும் ஸ்வீட் ஃபிஷ் கபே என்ற உணவகம், வெளிநாட்டினர் மட்டுமன்றி தாய்லாந்து மக்கள் மத்தியிலும் பிரபலமாகி உள்ளது.

கணுக்கால் ஆழத்துக்கு நீர் நிறைந்திருக்கும் உணவகத்தில் மேசை - நாற்காலி போட்டிருக்கிறார்கள். அதில் அமர்ந்தபடி காபியோ, தேநீரோ ருசிக்கலாம். அப்படியே காலடியில் வட்டமிடும் அழகு கொஞ்சும் மீன் கூட்டத்தையும் ரசிக்கலாம்.

கால்களை நிரடும் மீன்கள்

வழக்கமாக வீடுகளின் தொட்டிகளில் வைத்து வளர்க்கப்பட்டும் அழகு மற்றும் வாஸ்து ரக மீன்களையே அவ்வாறு உணகத்தில் வளைய வர விட்டிருக்கிறார்கள். அவை பார்வைக்கு நிறைவாக காட்சியளிப்பதோடு, தாங்கள் விரும்பிய விருந்தினரின் பாதங்களை நிரடிகுறுகுறுக்கவும் செய்யும்.

தாய்லாந்தின் கனோம் பகுதியில் செயல்படும் இந்த உணவகத்துக்கு படையெடுப்போர் அதிகம். மீன்களின் நலன் கருதி உணகத்துக்குள் நுழைவோர் தங்கள் கால்களை சுத்தம் செய்துகொள்ளவும் தனி வசதி செய்திருக்கிறார்கள். நாளில் மூன்று முறை நீரை மாற்றவும் செய்கிறார்கள்.

மீன்கள் மிதக்கும் உணவகம்

இந்த உணவகத்துக்கு வரவேற்பு மட்டுமன்றி எதிர்ப்பும் நிலவுகிறது. பிராணிகள் நல ஆர்வலர்கள் புகாரால் பலமுறை ’ஸ்வீட் ஃபிஷ் கபே’ மூடப்படவும் நேரிட்டிருக்கிறது. எனினும் உணவக உரிமையாளர் சட்டப் போராட்டம் நடத்தி, உணவகத்தை மீண்டும் திறந்து வாடிக்கையாளர்களை மகிழ்வித்து வருகிறார். இந்த உணவகம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

x