நீலகிரியில் தொடர்மழையால் திடீர் நிலச்சரிவு: சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!


நீலகிரியில் ஏற்பட்ட நிலச்சரிவு.

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நிலச்சரிவுகள் அதிகரித்து வருவதால், மலைப்பாதையில் பயணிப்போர் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். சீசன் காலங்கள் மட்டுமின்றி, பிற மாதங்களிலும் நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.

இதனிடையே வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கெனவே முன்னெச்சரிக்கையாக, ஆபத்தான நிலையில் இருந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டு, மலைப்பாதைகளில் பாறைகள் விழக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு சாலையோரங்களை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளது.

நிலச்சரிவு

இருப்பினும் தொடர் மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் நேற்று மரம் ஒன்று சாலையில் விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை வருவாய்த்துறை அதிகாரிகள் வெட்டி அகற்றினர்.

இந்நிலையில் குன்னூர் சாலையில் இன்று மரம் நிலச்சரிவு காரணமாக மரம் ஒன்றும் வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்ததால், அவ்வழியே வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. இதனை ஊழியர்கள் அப்புறப்படுத்தியதை அடுத்து பேருந்துகள் இயக்கப்பட்டன.

நிலச்சரிவுகளால் அடிக்கடி மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்

நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான இடங்களில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்காணித்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள போதும், நிலச்சரிவு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள பகுதிகளுக்குச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மலைப்பாதைகளில் பயணிப்போர் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சனாதனம் குறித்து நான் பேசியது தவறில்லை... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

நடிகை ராஷ்மிகாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ... கொந்தளித்த அமிதாப் பச்சன்!

x