கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்!


ஜிகா வைரஸ்

கர்நாடகாவைத் தொடர்ந்து கேரளாவிலும் ஜிகா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. அந்த மாநிலத்தில் ஒரே நாளில் 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளா சுகாதாரத்துறை அமைச்சர்

கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் கொசுக்களால் பரவக்கூடிய ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் அம்மாநில சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியபோது டெங்கு, எலிக்காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவியது. அதன் தொடர்ச்சியாக கோழிக்கோடு மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி அந்த மாவட்டத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜிகா வைரஸ் பரவி வருகிறது. ஒரே நாளில் 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுத் தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரிந்து வரும் வக்கீல்கள், நீதிபதிகள், ஊழியர்கள் சிலருக்கு தலைவலி, கண்வலி, மூட்டுவலி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தன.

இதையடுத்து அங்கிருந்த 3 நீதிமன்றங்கள் 2 நாட்கள் மூடப்பட்டன. நீதிமன்றத்தில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதில் நோய் பாதிப்பு இருந்த 23 பேரிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. அதில் நீதிமன்ற ஊழியர்கள் 8 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மாநிலம் முழுவதும் ஜிகா வைரஸ் குறித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x