காலதாமதமாகும் நடைமுறைகளால் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விரும்புவோர் தவிப்பு!


கோவை: தமிழகத்தில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு விண்ணப்பம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதற்கான அனுமதி பெற ஓராண்டு வரை காலதாமதமாவதால் நடைமுறையை விரைவாக்கிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வாடகைத்தாய் முறை என்பது பிறக்கும்போதே கருப்பை இல்லாதவர்கள், கருப்பை கோளாறு உள்ள பெண்களுக்கு வரப்பிரசாதமாகும். தாயிடம் இருந்து கருமுட்டையும், தந்தையிடம் இருந்து உயிரணுவும் சேகரித்து கரு உருவாக்கி மற்றொரு பெண்ணின் கருப்பைக்குள் வைத்து குழந்தை பெறுவது வாடகைத் தாய் முறை ஆகும்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற அதிகமான தம்பதியினர் விண்ணப்பித்து வருகின்றனர். வாடகைத்தாய் முறையில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கவும், நடைமுறைகளை ஒழுங்குபடுத்தவும் 2018-ல் மசோதா கொண்டு வரப்பட்டது.

இந்த மசோதா 2021-ல் சட்டமாக அரசிதழில் வெளியானது. கரோனா தொற்று, சட்டத்தை நடை முறைப்படுத்துவதில் தாமதம் போன்ற காரணங்களால் 2020 முதல் 2023 இறுதி வரை வாடகைத்தாய் நடைமுறை முழுமையாக நடைபெறவில்லை.

இதுகுறித்து, மருத்துவ சட்ட ஆலோசகரும், வழக்கறிஞருமான கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: வாடகைத்தாய் மூலம் குழந்தை தேவைப்படும் பெண்ணுக்கு 23 முதல் 50 வயதும், ஆணுக்கு 26 முதல் 55 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். வாடகைத்தாயாக இருப்பவர் 23 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். திருமணமாகி ஏற்கெனவே குழந்தை பெற்றவராக இருக்க வேண்டும். ஒரு முறை மட்டுமே வாடகைத்தாய் முறையில் அவர் குழந்தை பெற்றுக் கொடுக்க முடியும்.

கோவை, சேலம், ஈரோடு, மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற அதிக தம்பதிகள் விண்ணப்பித்துள்ளனர். கோவையில் 12 பேரில் ஒரு வாடகைத்தாய்க்கு குழந்தை பிறந்துள்ளது. மேலும் 11 வாடகைத்தாய்கள் கர்ப்பமாக உள்ளனர்.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற விரும்பும் தம்பதிகள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட செயற்கை கருத்தரித்தல் மையத்தின் பரிந்துரையின் பேரில், அவரவர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் பெண், மருத்துவக்குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார். அரசு மகப்பேறு மருத்துவர் பரிசோதனை செய்து இணை இயக்குநருக்கு பரிந்துரைப்பார். அதன்பேரில் இணை இயக்குநர், அந்தப் பெண்ணுக்கு தகுதி சான்றிதழை வழங்குவார்.

அத்தம்பதி அவர் மாவட்டம் சார்ந்த குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வாடகைத்தாய்க்கு 36 மாதங்களுக்கு மருத்துவக் காப்பீடு எடுத்த பிறகு, இணை இயக்குநர் அலுவலகத்தில் வாடகைத்தாய் சிகிச்சை நடைமுறைக்கு அனுமதி வழங்கப்படும்.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கான அனுமதி பெற குறைந்தது 6 மாதம் முதல் ஓராண்டு வரை காலதாமதமாகிறது. இதனால் வாடகைத்தாயாக வர விருப்பம் தெரிவிக்கும் தம்பதியின் உறவுமுறை பெண்கள் மனமாற்றம் ஆகிவிடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, கோவை மாவட்ட சுகாதார துறை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ராஜசேகரன் கூறும்போது, "கோவையில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற கடந்த ஓராண்டில் 10-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கோவையில் உள்ள 6 செயற்கைக் கருத்தரித்தல் மையங்களில் வாடகைத்தாய் நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன" என்றார்.

இதுகுறித்து, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற விண்ணப்பித்துள்ள செவிலியர் ஒருவர் கூறும்போது, "தற்போது கூலி தொழிலாளி தொடங்கி அனைத்து தரப்பினரும் வாடகைத்தாய் சட்டம் மூலம் குழந்தை பெறும் சூழல் உருவாகி உள்ளது.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கான அனுமதி வழங்கக் கோரி சுகாதார துறை இணை இயக்குநர் அலுவலகத்திற்கும், நீதிமன்றத்திற்கும் அலைந்து போராடி அனுமதி பெறும் சூழல் உள்ளது. எனவே, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற காலதாமதமின்றி அனுமதி பெறும் நடைமுறையை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

x